தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மண் மணம் மாறாத ஒரு கிராமத்தைச் சுற்றிச் சுழல்கிறது கதை. அங்குள்ள கிராமத்தைச் சேர்ந்த லைன்மேன் சுப்பையாவாக சார்லி நடித்துள்ளார். அவரது மகன் ஜெகன் பாலாஜி, சூரிய ஒளி மறைந்ததும் ஆட்டோமெட்டிக்காக எரியும் தெரு விளக்கு கண்டுபிடிப்பு ஒன்றை உருவாக்குகிறார். இத்திட்டத்திற்கு அரசின் அனுமதி பெற அவர் போராடுகிறார். அவரது முயற்சி வெற்றி பெற்றதா என்பதே படத்தின் கதை.
சுப்பையா என்ற லைன்மேன் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் சார்லி. அறிமுக நாயகன் ஜெகன் பாலாஜியும் தனது கேரக்டருக்கு ஏற்ப மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். முதல் படத்திலேயே நடிப்பில் சிக்ஸர் விளாசியிருக்கிறார்.
சரண்யா ரவிச்சந்திரன், தமிழ், அதிதி பாலன் உட்பட அனைவரும் கச்சிதமாக நடித்துள்ளனர்.
உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் வெளிவந்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் உதய்குமார் இயக்கியுள்ளார். உப்பள வாழ்க்கை வாழ்க்கை மிக யதார்த்தமாக படம்பிடித்து காட்டியுள்ளனர். தூத்துக்குடி வட்டாரப் பேச்சுவழக்கு படத்திற்கு மெருகூட்டி இருக்கிறது.
காதல் காட்சிகளில் கூட டூயட்டை தவிர்த்து 80-களின் பாணியில் பார்வையாலேயே அழகாக காட்டியிருக்கின்றனர். கிளைமாக்ஸ் காட்சி சூப்பர் என்றே தாராளமாக பாராட்டலாம்.
விஷ்ணு ராஜாவின் கேமரா அந்த உப்பளக் காற்றைக் கூட தியேட்டரில் உணரச் செய்திருக்கிறது. தீபக் நந்தகுமாரின் பாடல்கள் படத்தோடு ஒன்றிப் போயிருக்கிறது.
மொத்தத்தில் லைன்மேன் மக்களைக் கவரும் சூப்பர்மேன்.
– நிருபர் நாராயணன்