ஜெயவேல் முருகன் இயக்கத்தில் துஷ்யந்த் ஜெயபிரகாஷ், கேப்ரில்லா இணைந்து நடித்துள்ள படம் ‘வருணன்’.
ராதா ரவி, சரண்ராஜ், ஷங்கர்நாக் விஜயன், ஹரிபிரியா, ஜீவா ரவி, மகேஷ்வரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
யாக்கை பிலிம்ஸ் மற்றும் வான் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன.
வட சென்னையின் ராயபுரம் பகுதியில் தண்ணீர் கேன் விற்பனை செய்யும் இரு வணிகர்களுக்கு இடையே தொழில் போட்டி நிலவுகிறது. உரிமையாளர்களிடம் மோதல் போக்கு இல்லாவிட்டாலும், ஊழியர்கள் அடிக்கடி மோதலில் ஈடுபடுகிறார்கள். அதேநேரத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் தண்ணீர் கேன் நிறுவனத்தில் முதலீடு செய்து சம்பாதிக்க முயற்சி செய்கிறார். அவரது பேராசையால் இரு தரப்பினரின் தொழில் போட்டி பகையாக மாறுகிறது. இதனால், அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை எடுத்துச் சொல்வதே ‘வருணன்’.
மினரல் வாட்டர் கேன் நிறுவனம் நடத்தும் ராதாரவி மற்றும் சரண்ராஜ் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்.
ஹீரோ துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் மற்றும் கதாநாயகி நடித்திருக்கும் சின்னத்திரை புகழ் கேப்ரில்லா ஆகியோர் அருமையான நடிப்பை தந்திருக்கிறார்கள். கேப்ரில்லா வெள்ளித்திரையிலும் இனி தனி முத்திரை பதிப்பார் என எதிர்பார்க்கலாம்.
பிரியதர்ஷன் மற்றும் ஹரிபிரியா ஜோடியும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
படத்தில் ஒலிக்கும் நடிகர் சத்யராஜின் கம்பீரக் குரல் படத்தை மெருகேற்றும் விதமாக உள்ளது. நல்ல ஐடியா…!
ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் சந்தோஷின் கேமரா சும்மா சுழன்று சுழன்று காட்சிகளை படம்பிடித்துள்ளது. கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை படமாக்கிய விதம் அற்புதம். போபோ சஷியின் பின்னணி இசை கேமராவுடன் இணைந்து பயணத்திருக்கிறது என்றே கூறலாம். வாவ்…!
உலகின் மிக அத்தியாவசிப் பொருளான தண்ணீர் மற்றும் அதன் பின்னால் உள்ள வணிகம் மற்றும் அரசியலை பேசுகிறது வருணன். நல்லதொரு கருத்தை மக்களிடம் கொண்டுச் செல்ல முயன்றதற்காகவே இயக்குநர் ஜெயவேல் முருகனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
மக்களுக்கு தண்ணீர் எவ்வளவு முக்கியமோ, அதேபோல் ரசிகர்களுக்கு “வருணன்” முக்கியம். கோடை வெயிலுக்கு இதமாக கண்டு ரசிக்கலாம்.
– நிருபர் நாராயணன்