நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக நமது நிருபர் டிவி இணையதளம் உள்ளிட்ட சில ஊடகங்களில் வெளியான தகவல் ஆளுங்கட்சியை அதிர வைத்துள்ளது.
“சட்டமன்றத் தேர்தலில் களமிறங்குகிறார் நடிகர் விஜய்” என்ற தலைப்பில் ஏற்கனவே 2022, டிசம்பர் 23-ம் தேதி நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். வாரிசு திரைப்படத்தின் விநியோகம் மிரட்டி வாங்கப்பட்டதால், திமுக மீது கடும் கோபத்தில் உள்ள விஜய், உதயநிதிக்கு மட்டுமல்ல ஆட்சிக்கே சவால் விடும் வகையில் அரசியல் பணிகளை துவங்கியுள்ளார்.
அதன்படி தொகுதிவாரியாக முதலிடம் பிடித்த மாணவர்களை நேரில் வரவழைத்து பாராட்டிய விஜய், அடுத்து, தனது விஜய் மக்கள் இயக்கம் சார்பில், ‘விஜய் பயிலகம்’ என்ற பெயரில், 234 சட்டமன்ற தொகுதிகளிலும் இரவு பாடசாலை தொடங்க உத்தரவிட்டார். தற்போது இவை செயல்பாட்டுக்கு வந்துவிட்ட நிலையில், திமுக தலைமை தங்கள் கவனத்தை நடிகர் விஜய் பக்கம் முழுமையாக திருப்பியிருக்கிறது.
சினிமா தளபதிக்கு எதிராக அரசியல் தளபதி…!
ரஜினியின் அரசியல் பயணத்திற்கு சகல விதத்திலும் முட்டுக்கட்டை போட்ட திமுக, தற்போது அவரை வைத்தே விஜய்க்கு எதிராக வாய்ஸ் கொடுக்க செய்துள்ளது.
ஜெயிலர் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், “காட்டில் சிங்கம் போன்ற பெரிய மிருகங்களை சிறிய மிருகங்கள் சீண்டிக் கொண்டே இருக்கும்” என்று சூசகமாக விமர்சித்தார். மேலும், “குரைக்காத நாயும் இல்லை, குறை சொல்லாத வாயும் இல்லை” என்றும் குறிப்பிட்டார்.
இதே விழாவில் பேசிய சன் டிவியின் நிர்வாக இயக்குநரும், ஜெயிலர் படத் தயாரிப்பாளருமான கலாநிதி மாறன், “நான்கு தலைமுறைகளாக ஒரே சூப்பர் ஸ்டார், அது ரஜினிகாந்த் மட்டும் தான்” என்று புகழாரம் சூட்டி பேசினார்.
“ஜெயிலர்” திரைப்படத்தின் பாடலிலும் “சூப்பர் ஸ்டார் பட்டத்தை பறிக்க நூறு பேரு” என்ற வரிகள் விஜய்யை குறிவைத்தே எழுதப்பட்டதாக கூறப்படுகிறது.
எனவே, விஜய்க்கு எதிரான ரஜினியின் வாய்ஸ் என்பது, விஜய் மீதான ஆளுங்கட்சியின் அச்சத்தின் வெளிப்பாடு என்றே கருதப்படுகிறது.
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் விஜய் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கூறுகின்றனர். அரசியல் களத்தில் ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து, அடுத்த நகர்வை வைத்துக் கொள்ளலாம் என அவர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
ஆக, விஜயின் நோக்கம் ஆட்சியை பிடிப்பது அல்ல, நல்ல அரசியலை இளைய தலைமுறையிடம் எடுத்துச் செல்வது மட்டுமே என்று அவருக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எப்படி இருந்தாலும் சட்டமன்றத் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் களமிறங்குவதால் திமுகவின் வாக்கு வங்கி சிதறப்போவது உறுதி.
சிறுவர்கள், பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பு ரசிகர்களையும் கொண்டவராக திகழும் இளம் நடிகர்களில் விஜய் தான் முதலிடத்தில் உள்ளார். இவர்களின் வாக்குகள் மட்டுமின்றி கிறிஸ்தவ சிறுபான்மையின மக்களின் வாக்கும் விஜய்க்கு கிடைக்கும் என்பதால், விஜயின் அரசியல் அஸ்திரம் முதலில் தாக்கப் போவது திமுகவை தான்…!
தகவலை நமது தலைமை செய்தியாளரிடம் கூறிவிட்டு, ஆடி மாதக் காற்றை சமாளித்தபடி வீறுகொண்டு பறந்தது ஊர்குருவி.