நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்னும் பெயரில் அரசியல் கட்சி தொடங்கியுள்ள நிலையில், அதன் சின்னம் மற்றும் கொடி குறித்து பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தின் அறிக்கை எப்போதும் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் இருக்கும் வகையில் வெளியிடப்படுவது வழக்கம். தற்போது கட்சிப் பெயர் குறித்த அவரது அதிகாரப்பூர்வ அறிக்கை மற்றும் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த அறிக்கை ஆகியவையும் சிவப்பு, மஞ்சள் நிறத்திலேயே இருந்தது. இது ரசிகர்களிடம் நல்ல ரீச்சை கொடுத்துள்ளதால், அதே நிறத்திலேயே கட்சிக் கொடி தயாராவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக வெற்றி கழகம் தொடங்கிய 5 நாட்களிலேயே அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தை நேரடியாக நடத்தாமல் சென்னை பனையூரில் இருந்தபடி காணொலி மூலம் விஜய் ரகசியமாக நடத்தியுள்ளார். ஏற்கனவே முதலில் முடிவு செய்திருந்த தமிழக மக்கள் கழகம் என்ற கட்சிப் பெயர் கசிந்ததால், கடும் அதிருப்தியில் இருந்த விஜய் அதுபோல் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதால், இம்முறை மிகவும் ரகசியமாக செயற்குழு கூட்டத்தை நடத்தியுள்ளார்.
அனை்த்து மாவட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், கட்சியின் கொடி மற்றும் சின்னம் குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதன்படி விஜய் அறிக்கையில் இடம்பெற்ற சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்திலேயே கட்சி கொடியை வடிவமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுபோல் வெற்றி என்பதை குறிக்கும் வகையில் ஆங்கில எழுத்தான V வடிவில் இரட்டை விரலை காட்டும் வகையில் கட்சிக்கு சின்னம் பெறவும் திட்டமிட்டுள்ளார் விஜய். உதாரணத்திற்கு இரட்டை ரோஜா, இரட்டை தென்னை மரம் என்பது போல் சின்னம் பெற ஆலோசிக்கப்பட்டுள்ளது. எம்ஜிஆர் பாணியில் செயல்பட விரும்பும் விஜய், இது தமக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என கருதுகிறார்.
இதனிடையே, தமிழக வெற்றி கழகம் என்ற பெயரே தமிழ் இலக்கணப்படி தவறு என்றும், அதில் வெற்றி என்பதன் முடிவில் ‘க்’ எனும் ஒற்றெழுத்து வரவேண்டும் என்றும் தமிழ் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதற்கு நடுவே, தமிழக வாழ்வுரிமை கட்சி ஆங்கிலத்தில் TVK என்று அழைக்கப்படும் நிலையில், அதே பாணியில் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தை குறிப்பிடுவது சரியல்ல என்றும், இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் முறையிடப் போவதாகவும், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
எது எப்படியோ இப்படி சில குழப்பங்கள் நிலவினாலும் கட்சிக் கொடியின் நிறத்தில் சிவப்பு, மஞ்சள் இடம்பெறுவதற்கு எதிர்ப்பு எழாமல் இருந்தால் சரி என்கின்றனர் சாமானிய பொதுமக்கள்.
விஜய்யின் சிவப்பு கலர் சென்டிமென்ட் தகவலை நம்மிடம் கூறிவிட்டு, தன் கூடு நோக்கி பறந்தது ஊர்குருவி.
– நிருபர் நாராயணன்