சன் டி.வி.யில் கடந்த ஓராண்டாக ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்த பிரபல இயக்குநர் மாரிமுத்து மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 57.
தேனி மாவட்டம் பசுமலை என்னும் கிராமத்தை சேர்ந்த இவர் சினிமா ஆசையில் சென்னைக்கு வந்து ஆரம்பத்தில் துணை நடிகராக திரையுலக வாழ்க்கையை தொடங்கியுள்ளார். பின்னர், பிரபல இயக்குநர்கள் மணிரத்னம், வசந்த், சீமான், எஸ்.ஜே.சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். கவிஞர் வைரமுத்துவின் உதவியாளராகவும் பணியாற்றி இருக்கிறார்.
மின்சார வசதி இல்லாத கிராமத்தில் பிறந்து தினமும் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரசு பள்ளிக்கு நடந்தே சென்று வந்துள்ளார். அதாவது தினமும் 30 கிலோ மீட்டர் நடந்துள்ளார். வார இறுதி நாட்களில், வயலில் கூலி வேலை செய்து 9 ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார் மாரிமுத்து. அதை வைத்து தனது படிப்புக்கு தேவையான நோட்டு, பேனா, பென்சில் போன்றவற்றை வாங்க சேமித்து வைத்துக் கொள்வாராம்.
அதுமட்டுமல்ல பத்திரிகை வாங்க காசு இல்லாத நிலையில், பல கிலோ மீட்டர் நடந்து வருசநாடு வந்து அங்குள்ள டீக்கடையில் பேப்பர் படிப்பாராம். இதை மாரிமுத்து அளித்த பேட்டிகளில் அவரே தெரிவித்துள்ளார்.
கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். வாலி, கொம்பன், பைரவா, மகளிர் மட்டும், பரியேறும் பெருமாள், கடைக்குட்டி சிங்கம், விக்ரம், ஜெயிலர் உட்பட 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார்.
ஆனாலும், இவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத்தந்தது எதிர்நீச்சல் சீரியல் தான். தமிழகம் மட்டுமல்லாது உலகெங்கும் வாழும் தமிழர்களிடையே இவரை அடையாளப்படுத்தியது. இரவு 9.30 மணிக்கு தமிழகத்தின் பெரும்பாலான வீடுகளில் ஆதி குணசேகரனின் நடிப்புக்காகவே அந்த சீரியலை தவறவிடாமல் பார்க்கத் தொடங்கினர். யதார்த்தமான நடிப்பாலும் கம்பீரக் குரலாலும் இவரது வில்லன் கதாபாத்திரம் மக்களை வெகுவாக கவர்ந்தது. இவர் பேசும் வசனங்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவின.
எதிர்நீச்சல் சீரியல் டிஆர்பி ரேட்டிங்களில் முதலிடம் வகிக்க, மாரிமுத்துவின் தனித்துவமான நடிப்பே முக்கிய காரணமாக இருந்தது.
ஏறத்தாழ 35 ஆண்டு கால நேர்மையான உழைப்பில் இன்று வரை வாடகை வீட்டில் வசித்து வந்த மாரிமுத்து, போரூர் டிஎல்எப் அருகே நீச்சல் குள வசதியுடன் புதிய பங்களா கட்டி வந்தார். அங்கு ஒருசில வாரங்களில் குடிபுக இருந்த நிலையில், கடைசி ஆசை நிறைவேறாமலேயே அவரது உயிர் பிரிந்துள்ளது.
சென்னை வடபழனியில் காலை 8.30 மணிக்கு டப்பிங் பேசுவதற்காக ஸ்டுடியோவுக்கு வந்தவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட உடனடியாக தானே மருத்துவமனைக்கு காரை ஓட்டிச் சென்றுள்ளார். அங்கு மருத்துவர் சிகிச்சையை தொடங்கும் முன்பு மாரிமுத்துவின் உயிர் பிரிந்திருக்கிறது.
“எனது சீரியலை பார்த்து மக்கள் என்னை திட்டினால், அதுவே ஆதி குணசேகரனின் வெற்றி” என்றும் மாரிமுத்து கூறியிருக்கிறார். ஆனால், வில்லனாக நடித்து மக்கள் மனதில் கதாநாயகனாக உயர்ந்த அதிசயத்தை அவர் தனது நடிப்பால் நிகழ்த்தி காட்டியிருக்கிறார்.