அமெரிக்க வாழ் தமிழரான அருண் வைத்தியநாதன் இயக்கி தயாரித்துள்ள படம் ஷாட் பூட் த்ரீ.
வெங்கட் பிரபு, சிநேகா, யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
உயர் நடுத்தர குடும்பமான சாமிநாதன், ஷியாமளா தம்பதி அபார்ட்மென்ட்டில் வசிக்கிறார்கள். அவர்களது மகன் கைலாஷ் ஆசையாக ஒரு நாய் வளர்த்து வருகிறான். ஒருநாள் திடீரென நாய் காணாமல் போக, தனது நண்பர்களுடன் சேர்ந்து செல்லப்பிராணியை தேடுகிறான் சிறுவன் கைலாஷ். ஆனால், நாயை கொல்ல மாநகராட்சி ஊழியர்கள் திட்டமிடுகின்றனர்.
நாய் காப்பாற்றப்பட்டதா? அதை சிறுவன் மீட்டானா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
சிறுவர்கள் நாயை தேடிச் செல்வதை சுவாரஸ்யமாக படம்பிடித்திருக்கிறார்கள்.
சமீபத்தில் வெளிவந்த குழந்தைகளுக்கான மிகச்சிறந்த பொழுபோக்கு படமாக திகழ்கிறது ஷாட் பூட் த்ரீ. அதேநேரத்தில் பெரியவர்களையும் கவரும் வகையில் திரைக்கதை விறுவிறுப்பாக நகர்கிறது.
மேலும், இன்றைய பரபரப்பான உலகில் ஒரே குழந்தை போதும் என்று கணக்கு போட்டு வாழும் பெற்றோர்களின் பிரச்சனைகளையும் விவரிக்கிறது படம்.
சிநேகாவும் வெங்கட் பிரபுவும் நடுத்தர வயது பெற்றோர்களாகவே படத்தில் வாழ்ந்து காட்டியுள்ளனர். கச்சிதமான நடிப்பு.
கைலாஷ், பிரணித்தி, வேதாந்த் ஆகிய 3 சிறுவர்களும் யதார்த்தமாக கதையில் பொருந்தியிருக்கிறார்கள். பாராட்டுக்கள்…!
சிரிப்புக்கு யோகி பாபுவும் தனது கேரக்டருக்கு சிறப்பு சேர்க்கிறார்.
ராஜேஷ் வைத்யாவின் பின்னணி இசை கதையோடு இயல்பாக பயணிக்கிறது.
எத்தனை வசதி வாய்ப்புகள் இருந்தாலும் குழந்தைகளுடன் அன்றாடம் பேசிப் பழகுங்கள் என்பதை அழகாக சொல்லியிருக்கிறது ஷாட் பூட் த்ரீ. அதற்காகவே இயக்குநருக்கு ஹேட்ஸ் ஆப் சொல்லலாம்.
சினிமா பார்த்து ஜாலியாக பொழுதுபோக்க விரும்புபவர்கள் தாராளமாக தியேட்டருக்கு குழந்தைகளுடன் சென்று இப்படத்தை ரசிக்கலாம்.
– நிருபர் நாராயணன்