நிட்கோ ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் கார்த்தி மற்றும் நியாஸ் இணைந்து ஷூ படத்தை தயாரித்துள்ளனர்.
இப்படத்தில் யோகி பாபு, திலீபன், ரெடின் கிங்சிலே, ஜார்ஜ் விஜய், விஜய் டிவி பாலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆனாலும் திரைக்காட்சிகள் குழந்தைகளை சுற்றியே நகர்கிறது.
ஆசிரமத்தில் இருந்து பெண் குழந்தைகளை கடத்திச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்துகிறது ஒரு கொடூரக் கும்பல். மறுபுறம் தாய் இல்லாத குழந்தை அப்பாவின் மதுபோதையால் கஷ்டப்படுகிறது. அதேநேரத்தில் ஷூ வடிவத்தில் டைம் மெஷினை கண்டுபிடித்த திலீபன் அதை தொலைத்துவிடுகிறார்.
இவர்கள் மூவரையும் ஒரு மையப்புள்ளியில் இணைக்கிறது ரிப்பீட் ஷு திரைப்படம்.
பாலியல் தொழிலுக்கு கடத்தப்பட்ட குழந்தைகள் என்ன ஆனார்கள்? அவர்கள் மீட்கப்பட்டார்களா? திலீபனுக்கு டைம் மெஷின் ஷூ கிடைத்ததா? என்ற கேள்விகளுக்கு விடை தருவது படத்தின் மீதிக்கதை.
இயக்குநர் கல்யாண் மாறுபட்ட கோணத்தில் கதையை நகர்த்தி சென்றுள்ளார். விறுவிறுப்பான காட்சிகள் இருந்தாலும், காட்சி ஊடக நெறிப்படி கடத்தப்படும் குழந்தைகளின் குளோசப் காட்சிகளை சற்று தவிர்த்திருக்கலாம்.
சி.எஸ்.சாமின் பின்னணி இசை படத்திற்கு உயிரோட்டம் தருகிறது.
இப்படம் வியாபார நோக்கில் இல்லாமல் சமூக ஆர்வத்துடன் எடுக்கப்பட்ட விழிப்புணர்வு படமாக கருதி, தமிழக அரசு வரி சலுகை, விருதுகள் போன்றவற்றை வழங்கி ஊக்கப்படுத்தலாம்.