சினிமா, சின்னத்திரை மற்றும் மாடலிங் துறையில் வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி 20-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை மோசடி செய்து பாலியல் பலாத்காரம் செய்த நடிகர் முகமது சையத் என்பவரை போலீார் கைது செய்துள்ளனர்.
சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவாலை நேரில் சந்தித்து மாடல் அழகிகள் 3 பேர் (பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது) புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அதில் கூறி இருப்பதாவது :
எங்களுடன் ஒருசில விளம்பரப் படங்களில் நடித்த முகமது சையத் என்பவர் காதலிப்பதாக ஏமாற்றி பழகி, பின்னர் திருமண ஆசைகாட்டி எங்களிடம் உடல் ரீதியாக உறவு வைத்து, பின்னர் லட்சக்கணக்கில் பணத்தையும் வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டார்.
அவருடன் தனிமையில் இருந்தபோது எடுத்த புகைப்படத்தை காட்டி, இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டுவார். இதனால் பயந்துபோய் விஷயத்தை வெளியில் சொல்லாமல் நாங்களும் மறைத்து விட்டோம்.
நாங்கள் 3 பேரும் தனியாக ஒருவரை ஒருவர் சந்தித்தபோது, எங்களை அந்த மாடல் வாலிபர் ஏமாற்றியதை தெரிந்து கொண்டோம். அந்த வாலிபரை பற்றி விசாரித்ததில் எங்களைப் போன்ற இன்னும் ஏராளமான பெண்களை தனது காதல் வலையில் வீழ்த்தி, அவர்களை பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தெரிய வந்தது.
எங்களது பெற்றோருக்கு தெரியாமல் நாங்கள் இந்த புகார் மனுவை கொடுத்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
இவ்வாறு அந்த பெண்கள் புகார் மனுவில் தெரிவித்தனர்.
இதையடுத்து சென்னை கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில், வேப்பேரி உதவி கமிஷனர் ஹரிக்குமார், வேப்பேரி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், சென்னை புரசைவாக்கம் மில்லர்ஸ் சாலை லில்லி ஒயிட் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் முகமது சையத் (வயது 26) கைது செய்யப்பட்டார். பி.காம் படித்துள்ள இவர் விளம்பர படங்களில் நடித்து வருவதுடன் ஃபேஷன் ஷோக்களையும் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
திடுக்கிடும் வாக்குமூலம்
கைதான முகமது சையதுவை விசாரித்தபோது, அவர் திடுக்கிடும் தகவல்களை போலீசாரிடம் எந்த பயமும் இல்லாமல் அளித்த வாக்கமூலத்தில் கூறியதாவது:
கீழ்ப்பாக்கம், மில்லர்ஸ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறேன். எனது தந்தை பாரிமுனை பகுதியில் டிபார்ட்மென்டல் ஸ்டோர் நடத்தி வருகிறார். நான் கல்லூரி படிப்பு முடிந்த பிறகு, மாடலிங் தொழிலில் புகுந்தேன். அங்கு நிறைய பெண்களிடம் பழக வாய்ப்பு கிடைத்தது.
எனது அழகை கண்டு மயங்கி நிறைய பெண்கள் எனது காமவலையில் வீழ்ந்தனர். பழகிய சில நாட்களில் படுக்கையை பகிர்ந்து கொள்வேன். சம்மதிக்காத பெண்களை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசைகாட்டி படுக்கையறைக்கு அழைத்து வந்துவிடுவேன்.
வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைத்தளங்கள், எனது காதல் மோசடி வாழ்க்கைக்கு பெரிதும் உதவியது. என்னுடன் தனிமையில் இருந்த பெண்களின் புகைப்படங்களை தேதி வாரியாக பட்டியல் போட்டு வைத்துள்ளேன். என்னிடம் 20 பெண்களின் பட்டியல் உள்ளது. இதைத் தவிர கணக்கில் வராத பெண்களின் பட்டியலும் உள்ளது.
கடந்த 5 ஆண்டுகளாக ஜாலியாக சென்ற எனது உல்லாச வாழ்க்கையில் தற்போது முதல்முறையாக தடங்கல் ஏற்பட்டுள்ளது. இந்த சவாலை எதிர்கொள்வேன்.
இவ்வாறு முகமது சையத் வாக்குமூலம் கூறியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிக்கியது எப்படி?
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு வரவேற்பாளராக சென்ற மூன்று இளம்பெண்களிடம் ஒரே நேரத்தில் முகமது சையத் ‘சாட்டிங்’ செய்துள்ளார். அந்த இளம் பெண்களில் ஒருவர் என் ‘பாய் பிரண்ட்’ என அவரது புகைப்படத்தை தோழியிடம் காட்டினார். அதிர்ச்சியடைந்த அந்த பெண் ‘அவர் என் பாய் பிரண்ட்’ என கூறினார். அப்போது முகமது சையத்துடன் சாட்டிங் செய்தவாறு இருந்த 3-வது இளம்பெண் ‘அவர் என் பாய் பிரண்ட். இதோ பாருங்கள் இப்போது கூட சாட்டிங் செய்கிறார்’ என காட்டியுள்ளார். இதனால் தாங்கள் மூவரும் மோசம் போனதை உணர்ந்துகொண்ட அந்த பெண்கள் உடனடியாக அடுத்தடுத்து போலீசில் புகார் அளித்தனர்.
இதையடுத்து தனிப்படை போலீசாரிடம் காதல் மோசடி மன்னன் முகமது சையத் சிக்கினார். இவரிடம் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனால் முகமது சையதுவால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
– நிருபர் ஆர்.நாராயணன்