சிம்புதேவனின் இயக்கத்தில் வெளிவந்துள்ள புதிய படம் “போட்”.
BOAT என்பதன் விரிவாக்கமே Based On A True Incident தான் என டைட்டில் கார்டில் போட்டு, ஆரம்பத்திலேயே சிக்ஸர் அடிக்கிறார் சிம்புதேவன்.
1943-ம் ஆண்டு, பழைய மெட்ராஸ் மாகாணத்தில் இந்த கதை நடைபெறுவதாக காட்சிகளை அழகாக அமைத்துள்ளனர். அப்போது ஜப்பானின் போர்க்கப்பல் சென்னையை தாக்கப்போவதாக தகவல் பரவ, நடுக்கடலுக்கு சென்றுவிட்டால் உயிர் பிழைத்துவிடலாம் என நம்பி, தனது பாட்டியுடன் படகில் தப்பிக்கிறார் யோகிபாபு. அவருடன் மேலும் சிலர் அந்த படகில் ஏறிக் கொள்கின்றனர். ஒரு ஆங்கிலேய போலீஸ் அதிகாரியும் ஏறிக்கொள்கிறார்.
நடுக்கடலில் போட் உடைந்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் வர ஆரம்பிக்க, அதன் பிறகு என்ன ஆனது, அவர்களில் எத்தனை பேர் தப்பித்தார்கள், என்பதே படத்தின் மீதிக்கதை.
நகைச்சுவை நடிகர் யோகிபாபுவை நம்பி இந்த சிறிய பட்ஜெட் படத்தை எடுத்துள்ளனர். அவரும் இந்த போட்டுக்கு ஒரு துடுப்பாக இருந்து படத்தை கரையேற்றியுள்ளார். உணர்வுப்பூர்வமான காட்சிகளிலும் அசத்தியிருக்கிறார் நம்ம யோகி…!
கதாநாயகியாக வரும் கெளரி கிஷன், நூலகராக எம்.எஸ்.பாஸ்கர், ஆங்கிலேய அதிகாரியாக நடித்துள்ள ஜெஸ்ஸி ஃபாக்ஸ் ஆலன், சின்னி ஜெயந்த், மதுமிதா, லீலா என ஒவ்வொருவரும் அற்புதமாக நடித்து ஸ்கோர் செய்கிறார்கள்.
கடலின் அழகையும் மனிதர்களின் கொடூர மனதையும் அப்படியே யதார்த்தமாக படம்பிடித்து காட்டியிருக்கிறது ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கத்தின் கேமரா…!
ஜிப்ரான் பின்னணி இசையில் நாமும் ஒரு கடலோடியாக மாறிவிடுகிறோம். படத்தில் பாடல் காட்சிகள் இல்லை.
பழைய சென்னைவாசியாக யோகி பாபு, மயிலாப்பூர் ஐயர் குடும்பம், தெற்குச் சீமை அண்ணாச்சி, ராஜஸ்தான் சேட், இஸ்லாமிய இளைஞர், தெலுங்கு குடும்பம், வெள்ளைக்கார அதிகாரி என அனைத்து தரப்பு மக்களையும் ஒரே படகில் பயணிக்கச் செய்து, அவர்களின் இயல்பான உணர்வுகளை அழகாக காட்டியிருக்கிறார் இயக்குநர் சிம்புதேவன். அந்த வகையில், படகில் ஒரு “பாரத விலாஸ்” படத்தை காட்டிய சிம்பு தேவனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
சாதி, மத ஏற்றத்தாழ்வுகளை பற்றிய வசனங்கள் தெறிக்கிறது…! உண்மையை இடித்துக் காட்டுகிறது.
போட் அருகே உலா வரும் சுறா, உடைந்த படகு மூழ்கும் அபாயம், 3 பேர் கடலில் குதித்தால் தான் மற்றவர்கள் உயிருடன் கரை சேர முடியும் என்ற நிலை, மனிதர்களின் வெறுப்புணர்வு, படகு கரை சேருமா, சேராதா என்ற பரபரப்பு என நடுக்கடலில் ஒரு த்ரில்லிங் கதைக்கு நிகராக படம் நகர்கிறது.
மொத்தத்தில் கடலின் அழகை ரசித்துக் கொண்டே நாமும் படகில் பயணிக்கும் அனுபவத்தை தருகிறது “போட்”. குடும்பத்துடன் பார்த்து ரசிக்க வேண்டிய அருமையான படம்.
– நிருபர் நாராயணன்