ஹாலிவுட்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற டைட்டானிக் பெயரில் வெளிவந்துள்ள இந்த படத்தை ஜானகிராமன் இயக்கியுள்ளார். இந்த இரு படங்களுக்கும் உள்ள ஒரு ஒற்றுமை காதல் மட்டும்தான்.
கலையரசன், கயல் ஆனந்தி, காளி வெங்கட், ராகவ் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
காளி வெங்கட், கலையரசன், ராகவ் விஜய் இவர்கள் மூவரும் ரயில் பயணத்தில் சந்திக்கிறார்கள். மூவரும் தங்கள் காதல் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். இந்நிலையில், பெங்களூரில் நடைபெறும் ராகவ விஜய் திருமணத்திற்கு செல்லும் மற்ற இரு நண்பர்களுக்கும் எதிர்பாராத சில அதிர்ச்சிகள் காத்திருக்கிறது.
பெங்களூரில் கண்ட காதல் அதிர்ச்சி என்ன? அதிலிருந்து மீண்டு வந்தார்களா? என்பது தான் படத்தின் மீதி கதை.
கலையரசன், காளி வெங்கட், ராகவ் விஜய், ‘கயல்’ ஆனந்தி, ஆஷ்னா சவேரி ஆகியோர் கதைக்கு ஏற்ப மிக யதார்த்தமாக நடித்துள்ளனர். மதுமிதா, சேத்தன், தேவதர்ஷினி, காயத்ரி சங்கர், இயக்குனர் பாலாஜி மோகன், ரவிகுமார் ஆகியோரும் இயல்பாக நடித்துள்ளனர்.
பாலு ஒளிப்பதிவும், நிவாஸ் கே.பிரசன்னாவின் இசையும் படத்துக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளன.
சண்டைக் காட்சிகள், வன்முறை இப்படி எதுவுமே இல்லாமல் முழுக்க முழுக்க காதல் கதையை குருவிக்கூடு போல நேர்த்தியாக பின்னி இருப்பதற்காக இயக்குனர் ஜானகிராமனை வெகுவாக பாராட்டலாம்.
திருமணத்துக்கு முன்பான காதலை விட, திருமணத்துக்கு பிறகான காதல் மட்டுமே வலிமையானது என்பதை அழகாக சொல்லியிருக்கிறார்கள். கிளைமாக்ஸ் ட்விஸ்ட் ரசிக்க வைக்கிறது.
கலகலப்பான படம். தியேட்டருக்கு குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம்.
– நிருபர் நாராயணன்
