ஆர் கே ட்ரிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டி. ராதாகிருஷ்ணன் தயாரித்திருக்கிறார். கேஎம்பி புரொடக்ஷன்ஸ் மற்றும் எஸ்பிஎம் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணை தயாரிப்பாளர்களாக பங்காற்றியுள்ளன.
பைனான்ஸ் மோசடி, குறைந்த விலை செல்போன் மற்றும் காதல் நாடகம் என பல்வேறு வழிகளில் மோசடிகள் மூலம் 8 ஆயிரம் கோடி சம்பாதிக்கிறார் கதாநாயகன் கார்த்தீஸ்வரன். அவர் போலீஸில் சிக்கினாரா, ஏமாற்றப்பட்டவர்களுக்கு பணம் கிடைத்ததா என்பது தான் படத்தின் கதை.
இந்த சுவாரஸ்யமான கதையை எழுதி படத்தை இயக்கி இருப்பதுடன் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார் கார்த்தீஸ்வரன். கச்சிதமாக நடித்து கோலிவுட்டில் தனக்கொரு முத்திரையை பதித்துள்ளார். அவரது மோசடி குழுவில் இடம்பெற்றுள்ள லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, ஆதவன், பிளாக் பாண்டி, மிருதுலா சுரேஷ், அகல்யா வெங்கடேசன் ஆகியோரும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர்.
காதல் மயக்கத்தில், 500 கோடி ரூபாயை ஹீரோவிடம் இழக்கும் கதாநாயகியாக மிருதுளா நடித்துள்ளார். கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் ஸ்ரீநிதி கம்பீர நடிப்பை தந்துள்ளார்.
ஸ்ரீகாந்த் தேவாவின் உற்சாகமான இசைக்கு ஈடுகொடுத்து நகர்கிறது என்.எஸ்.ராஜேஷின் கேமரா படம்பிடித்த காட்சிகள்.
அப்பாவிகளை குறிவைத்து நடைபெறும் மோசடிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வெளியாகியுள்ளது இப்படம். இந்த படத்தைப் பார்த்த பிறகாவது ஏமாற்றப்படுபவர்கள் உஷாரானால் அதுவே இப்படத்திற்கு கிடைத்த வெற்றி.
தியேட்டரில் ரசிக்கலாம்…!
– நிருபர் நாராயணன்
