சென்னை அம்பத்தூர் எஸ்டேட் பேருந்து நிலையம். காலை நேர பரபரப்புடன் மக்கள் பேருந்துகளை பிடிக்க ஓடிக் கொண்டிருந்தனர். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த பேருந்து நிலையம் தற்போது வெளிநாட்டு பேருந்து நிலையம் போல் காட்சியளிக்கிறது.
புதிதாக கட்டப்பட்ட அம்பத்தூர் எஸ்டேட் பேருந்து நிலையம் கடந்த மாதம் திறந்து வைக்கப்பட்டது.
மார்கழி குளிரிலும் மழைத்தூறல் விழுமோ என வானம் தன் வர்ணத்தை மாற்றிக் கொண்டிருந்தது. இந்தியன் எக்ஸ்பிரஸ் அலுவலகம் அருகேயுள்ள தேநீர் கடையில் ஆல் இன் ஆல் அழகுராஜாவும் கிசு கிசு கோவாலும் காத்திருக்க பைக்கில் வந்திறங்கினார் ரிப்போட்டரு தம்பி.
“மாஸ்டர் மூணு டீ போடுங்க…” குரல் கொடுத்தார் ஆல் இன் ஆல் அழகுராஜா
“என்ன அண்ணே டீ விலை ஏறிடுச்சா” என அங்கு வைக்கப்பட்டிருந்த போர்டை பார்த்தபடி கேட்டார் கிசு கிசு கோவாலு.
“ஆமாண்ணே ஒண்ணும் கட்டுப்படி ஆகலே… அதான் இப்போ 12 ரூவா ஆக்கிட்டோம். ஆனா உங்களுக்கு அதே 10 ரூவா தாம்னே” என்றார் பாசக்கார டீ மாஸ்டர். கடை ஓனரும் அவர்தான். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கிராமத்து மண்ணின் மணம் அவரது பேச்சில் எதிரொலிக்கும்.
“என்ன தம்பி, வாக்காளர் பட்டியலில் 70 லட்சம் பேரை நீக்கப் போறதா சொல்றாங்களே… உண்மைதானா” என்றார் அழகுராஜா.
“ஆமாண்ணே, இரட்டைப் பதிவு, இறந்தவர்கள்… அப்புறம் வீடு மாறினவங்க பேரு எல்லாம் நீக்கப் போறாங்க… அந்த கணக்குப்படி 70 லட்சம்னு சொல்றாங்க… வரைவுப் பட்டியல் 19-ம் தேதி வெளியாகுது. அதுக்குப் பிறகு தான் உண்மை நிலவரம் தெரியும்” – விளக்கம் கொடுத்தார் ரிப்போட்டரு தம்பி.
“தம்பி, நான் வீடுகளுக்கு நியூஸ்பேப்பர் போட்டுட்டு, பீச்சுல சுண்டல் கடையை கவனிக்கப் போனா வீடு திரும்ப நைட்டு 12 மணி ஆயிடுதுப்பா… நம்மளால அந்த வாக்காளர் படிவத்தை எழுதி கொடுக்க முடியலைப்பா… அப்போ என் பேரை எடுத்திடுவாங்களா…” அப்பாவியாக கேட்டார் அழகுராஜா.
“அண்ணே, பயப்படாதீங்க வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு விடுபட்டவர்கள் பெயரை சேர்க்க வாய்ப்பு தருவாங்க… அப்போ அவங்க சொல்ற படிவத்தை எழுதி கொடுத்தா போதும். இறுதி வாக்காளர் பட்டியல்ல உங்க பேரு வந்திடும்” – ரிப்போட்டரு தம்பி கூற நிம்மதியடைந்தார் கோவாலு.
குளிருக்கு இதமாக ஆவி பறக்க சூடான டீ வர, மூன்று நண்பர்களும் பெற்றுக் கொண்டனர்.
“என்ன தம்பி, அம்பத்தூர் போலீஸ் ஸ்டேஷன் பெண் எஸ்.ஐ. அந்தோணி மாதா தற்கொலை பண்ணிட்டாங்களாமே. பேப்பர்ல படிச்சுட்டு அதிர்ச்சி ஆகிட்டேம்பா… அவங்க மரணத்துல சந்தேகம் இருக்கிறதா, அவங்க சகோதரி வீடியோ வெளியிட்டிருக்காங்களே…. உண்மை தான் என்ன?” இறுக்கமான குரலில் கேட்டார் அழகுராஜா.
“அண்ணே, அவங்க பின்னந் தலையிலும் தாடையிலும் அடிபட்ட அடையாளம் இருந்துருக்கு. அவங்க வீட்ல கதவை உடைச்சு மீட்டதா சொல்றாங்க… அந்த சத்தம் கேட்டு அவங்க பசங்க எப்படி எழுந்திருக்காம இருப்பாங்க… பெண் எஸ்.ஐ. குடும்பத்தினர் சொல்ற மாதிரி இது தற்கொலை தானா என்பதுல பலத்த சந்தேகம் இருக்கு… அவரை தற்கொலைக்கு தூண்டினதா அவரோட நண்பரான மீஞ்சுர் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ. ரஞ்சித் குமார் மேல வழக்குபதிவு பண்ணியிருக்காங்க…. சட்டம் ஒழுங்கை கவனித்த பெண் எஸ்.ஐ. குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே மக்களோட எதிர்பார்ப்பா இருக்கு…” சொல்லி முடித்தார் ரிப்போட்டரு தம்பி.
“ஆமாம் தம்பி, நேரடி எஸ்.ஐ. பணிக்கு செலக்ட் ஆக எவ்வளவு கடினமா உழைச்சி அந்த பதவிக்கு வந்திருப்பாங்க… பணியிலையும் எல்லார்கிட்டேயும் கனிவோட நடந்துகுவாங்கன்னு சொல்றாங்க… அதனால, மக்களுக்கு ஒரு நீதி, தங்களுக்கு ஒரு நீதின்னு இல்லாம, காவல்துறை நேர்மையாக விசாரண நடத்தி, குற்றவாளி… காவல்துறையை சேர்ந்தவராக இருந்தாலும், சட்டப்படி உரிய தண்டனையை விரைவா வாங்கிக் கொடுக்கனும்…” ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் கிசு கிசு கோவாலு.
“சட்டம் அனைத்திற்கும் மேலானது. பெண் எஸ்.ஐ. குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் என நம்புவோம்” என்றார் ஆல் இன் ஆல் அழகுராஜா.
டி-70 பேருந்தில் தொங்கியபடி சென்ற மாணவர்களை அக்கறையுடன் கீழே இறங்கச் செய்து அடுத்த பேருந்தில் ஏறச் செய்தார் போக்குவரத்து பிரிவு காவலர்.
“கடமை தவறாத அத்தனை போலீஸாருக்கும் ராயல் சல்யூட்” என்றார் சற்றே உணர்ச்சிவசப்பட்ட கிசு கிசு கோவாலு.
“தம்பி, உங்க செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனை எங்கப்பா ஆளையை காணோம்” என அடுத்த டாபிக்கிற்கு சென்றார் ஆல் இன் ஆல் அழகுராஜா.
“அண்ணே, செய்தித்துறை செயல்படாத துறையா இருக்குண்ணே… பத்திரிகையாளர்களுக்கு தரவேண்டிய அங்கீகார அட்டை வழங்குறதுல கூட பெரிய குளறுபடி… செய்தித்துறையில இருக்கற ஊழியர்கள் தங்களுக்கு வேண்டிய சொந்த பந்தங்களுக்கு எல்லாம் பிரஸ் கார்டு போட்டு கொடுத்திருக்காங்களாம். வருஷா வருஷம் அதையே ரினிவல் மட்டும் பண்றாங்கப்பா…. இப்படிப்பட்ட அதிகாரிகளால அரசுக்கு தான் கெட்டப் பேரு…. புதிய விண்ணப்பங்களுக்கு கடந்த 10 வருஷமாவே கார்டு தராம நிறுத்தி வச்சிருக்காங்க… தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில, இந்த வருஷமாவது முறையா பரிசீலிச்சி தகுதியானவர்களுக்கு கொடுத்திருக்கலாம். ஆனா, கோட்டை விட்டுட்டாங்க… செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் உடனடியா நடவடிக்கை எடுப்பாருன்னு நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள் காத்திருக்காங்கப்பா…” விரிவாக விளக்கம் கூறினார் ரிப்போட்டரு தம்பி.
அருகே டீ குடித்துக் கொண்டிருந்த பேருந்து ஓட்டுநர்களும், நடத்துனர்களும் நம்மை பார்த்து மெல்லிய புன்னகையை வெளிப்படுத்தினர். அதேநேரத்தில், பாரதியாரின் பிறந்தநாள் விழாவில், சீமானின் அனல் பறக்கும் பேச்சை செல்போனில் ஆர்வத்துடன் கேட்கத் தொடங்கினார் கிசு கிசு கோவாலு,
கண்ணாடி தம்ளரில் தேநீர் காலியானது. அதற்கான காசை ஜி-பே செய்த ரிப்போட்டரு தம்பி, “சரி அடுத்த வாரம் பார்ப்போம்” என கோவாலிடம் கூறியபடி பைக்கை ஸ்டார்ட் செய்தார். ஆல் இன் ஆல் அழகுராஜா பின்சீட்டில் ஏறிக்கொள்ள பைக் ஆவடி நோக்கி சீறிப் பாய்ந்தது.
– சந்திப்பு தொடரும்…
