உலகப் புகழ்பெற்ற சென்னை மெரினா கடற்கரை.
பொங்கல் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக கடற்கரையில் காணும் திசையெல்லாம் மக்கள் கூட்டம். மாலை வேளையில், நூற்றுக்கணக்கான கடைகள் பேட்டரி விளக்குகளுடன் அழகாக ஜொலித்துக் கொண்டிருந்தன.
மணற்பரப்பில் ரிப்போட்டரு தம்பி, புல்லட் புலி, கிசு கிசு கோவாலு, ஆல் இன் ஆல் அழகுராஜா ஆகிய நண்பர்கள் வட்டமாக அமர்ந்திருக்க…
“அண்ணே சுக்கு காபி வேணுமா” என்ற குரல் மிக அருகே ஒலித்தது.
“நாலு காபி குடுப்பா…” என்றார் புல்லட் புலி.
சூடான சுக்கு காபி வீசும் குளிர்காற்றுக்கு இதமாக இருந்தது… சற்று தொலைவில், கல்லூரி பெண்கள் சிலர் கும்பலாக ஜனநாயகன் படப் பாடலை ஒலிக்கச் செய்து ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்தனர்.
“என்னப்பா இது, எங்கே பார்த்தாலும் விஜய் ரசிகர்களா இருக்காங்க… வீட்டிலும் பேருந்திலும் கூட எங்க ஓட்டு விஜய்க்கு தான் சொல்ற குரல் கேட்குதேப்பா… உண்மையிலேயே திமுகவுக்கு விஜய் கடும் போட்டியா இருப்பாரோ…” காபி குடித்தபடி கேட்டார் புல்லட் புலி.
“அண்ணே… சினிமா எஃபக்ட்ல அவங்க அப்படி இருக்காங்க…. உளவுத்துறை ரிப்போர்ட் படி, திமுக கூட்டணி சுமார் 180 தொகுதிகளில வெற்றி உறுதின்னு தகவல் வந்திருக்கு… திமுகவை மட்டுமே குறிவைத்து விமர்சிக்கும் விஜய்யால, அதிமுக அதிருப்தி ஓட்டும், அவரோட தீவிர ரசிகர்கள் ஓட்டும் மட்டும்தான் அவருக்கு கிடைக்கும்… இதனால திமுகவுக்கு பெரிய அளவுல எந்த பாதிப்பும் இல்லைங்கிறது தான் நிஜமான கள நிலவரம்” என சொல்லி முடித்தார் ரிப்போட்டரு தம்பி.
“அப்போ விஜய் வெறும் புஸ்வாணம் தானா…!” அப்பாவியாக கேட்டார் அழகுராஜா.
“அடுத்த 2031 சட்டமன்றத் தேர்தலில் வேண்டுமானால் அவர் திமுகவுக்கு போட்டியாக இருக்க வாய்ப்பு உண்டு. அதுவும்… வரும் தேர்தலில் அவர் பாஜகவின் சக்கர வியூகத்தில் இருந்து தப்பித்தால் மட்டுமே சாத்தியம். இல்லையென்றால் த.வெ.க. தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளில் ஒன்றாகவே இனி இருக்கும்…” என்றார் ரிப்போட்டரு தம்பி.
“அப்போ… அரசியலில் விஜய் நிலைமை என்னவாகும்” என ஆர்வத்துடன் கேட்டார் புல்லட் புலி.
“கவலைப்படாதீங்க… வரும் செப்டம்பர்ல சினிமாத்துறைக்கே அவரு திரும்பிடுவாரு…. அடுத்த பொங்கலுக்கு அவரோட அடுத்த படம் கண்டிப்பா ரிலீஸ் ஆகும்…” என்றார் ரிப்போட்டரு தம்பி.
அரட்டையில் கலந்துகொள்ளாமல் மவுன விரதம் போன்று அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தார் கிசு கிசு கோவாலு. “காதலுக்கு மரியாதை” திரைப்படக் காலத்தில் இருந்து விஜய்யின் தீவிர ரசிகரான கோவாலு, நடிகர் விஜய்யின் திரையுலக செய்தித் தொடர்பாளருடன் நீண்ட காலமாக நெருங்கிய நட்பு கொண்டவர். சினிமா ரிப்போட்டராக பல முன்னணி ஊடகங்களில் பணியாற்றியவர்.
“கோவாலு அண்ணே… என்ன சோகமா இருக்கீங்க…” என சீண்டினார் ஆல் இன் ஆல் அழகுராஜா…
“ஒண்ணுமில்லை… எங்க தளபதி கதை அவ்ளோதானா…” என மெல்லிய குரலில் கேட்டார் கோவாலு.
“அண்ணே… உங்க தளபதி கோட்டையை பிடிக்கலைன்னா என்ன, தளபதி கோட்டை அப்படிங்கிற பேர்ல ஒரு படம் நடிச்சுற வேண்டியது தானே…!” என சிரித்தபடி கிண்டலாக கூறினார் அழகுராஜா.
நண்பர்களின் உற்சாக அரட்டைக்கு நடுவே, பேப்பர் கப்பில் சுக்கு காபி காலியாகி இருந்தது.
பேச்சை ஆர்வத்துடன் கவனித்தபடி நின்றிருந்த காபி விற்ற இளைஞரிடம் 100 ரூபாய் தாளை நீட்டினார் ரிப்போட்டரு தம்பி. மீதியை கொடுத்துவிட்டு புன்னகையுடன் நகர்ந்து சென்றார் காபி இளைஞர்.
“டூட்” படத்தில் வரும் இசைஞானி இளையராஜாவின் “கருத்த மச்சான்…” பாடல் தூரத்தில் எங்கோ ஒலித்துக் கொண்டிருந்தது.
“அப்போ அடுத்த வாரம் அம்பத்தூரில் சந்திப்போம்” என புல்லட் புலி கூற… நண்பர்கள் நால்வரும் தங்கள் உடையில் ஒட்டியிருந்த கடற்கரை மணலை தட்டியபடி புறப்பட்டனர்.
சர்வீஸ் சாலையில் நிறுத்தியிருந்த தங்கள் பைக்கை ரிப்போட்டரு தம்பியும், புல்லட் புலியும் ஸ்டார்ட் செய்ய ஆல் இன் ஆல் அழகுராஜாவும், கிசு கிசு கோவாலும் ஆளுக்கொரு வண்டியில் ஏறிக்கொண்டனர்.
நண்பர்களின் பைக்குகள் பாரிமுனை நோக்கி சீறிப் பாய்ந்தன.
– சந்திப்பு தொடரும்…
