புரட்சித் தலைவர் எம் ஜி ஆரின் வலதுகரமாக கருதப்பட்டவர் ஆர்எம்வி என்று அழைக்கப்பட்ட அருளாளர் இராம வீரப்பன்.
ஆர்எம்வீ-யின் வாழ்க்கை வரலாற்றின் முக்கியப் பகுதிகளை மட்டும் “ஆர்எம்வி – தி கிங் மேக்கர்” என்ற பெயரில் அவரது மகன் தங்கராஜ் ஆவணப்படமாக தயாரித்துள்ளார். 2 மணி நேரம் ஓடும் இந்த இந்த படத்தை பினு சுப்பிரமணியம் இயக்கியுள்ளார்.
ஆர்எம்வி-யின் இளமைக்காலம், அரசியல், சினிமா, ஆன்மிகம் உள்ளிட்ட பல்துறை சேவைகளை நேர்த்தியாக விவரித்துள்ளனர்.
முதலமைச்சர் ஸ்டாலின், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து, இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன், திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன், கவிஞர் முத்துலிங்கம் உள்ளிட்டோர் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் மிகவும் சுவாரஸ்யமாக தொகுக்கப்பட்டுள்ளது.
குடியரசுப் பத்திரிகையின் கணக்குகளை கையாளும் பணியை சிறப்பாக செய்து பெரியாரின் அன்பைப் பெற்றவர் ஆர்எம்வி.
90-களில் வெளிவந்த பாட்ஷா திரைப்படம் தமிழ்நாட்டின் அரசியலை புரட்டிப்போடும் அளவுக்கு பெரும் வரவேற்பு பெற்றது. அதில், இடம்பெற்ற “ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி” என்கிற வசனத்தை பாலகுமாரன் “ஒரு வாட்டி சொன்னா நூறு வாட்டி சொன்ன மாதிரி”ன்னு எழுதி இருந்தார். அதில் திருத்தம் செய்து தமிழ்நாட்டில் பட்டிதொட்டியெங்கும் எதிரொலிக்கச் செய்தவர் ஆர்எம்வீ அவர்கள் தான், என்பது பலருக்கும் தெரிந்திராத செய்தியாக உள்ளது.
மொத்தத்தில் பன்முகத்தன்மை கொண்ட ஆர்எம்வி-யின் வரலாற்றை ஆர்எம்வி – தி கிங் மேக்கர் என்ற தலைப்பில் படமாக்கியிருப்பது மிகவும் பொருத்தமானதே…!
– நிருபர் நாராயணன்
