சின்னத்தம்பி புரொடக்சன் நிறுவனம் சார்பில் மகேஸ்வரன் தேவதாஸ் தயாரித்திருக்கும் படம் ‘சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்’. சாண்டி ரவிச்சந்திரன் இணை தயாரிப்பாளராக உள்ள இந்த திரைப்படத்தை மீடியா மைண்ட்ஸ் நிறுவனம் வழங்குகிறது.
மதுரையை சேர்ந்த பிரபல க்ரைம் நாவல் எழுத்தாளரின் மகன் வெற்றி. அவரது தந்தையின் வாழ்க்கை கதையை தனது பத்திரிகையில் தொடராக எழுத, வெற்றியை சென்னைக்கு வரவழைக்கிறார் பெண் பத்திரிகையாளரான ஷில்பா மஞ்சுநாத். அவர்களுக்கு காதல் தீ பற்றிக்கொள்கிறது. இதற்கு நடுவே காவல்துறை ஆய்வாளர் தம்பி ராமையாவுடன் ஹீரோவுக்கு நட்பு கிடைக்கிறது. சென்னையில் நடக்கும் ஒரே மாதிரியான கொலைகள் தொடர்பான விசாரணையில் தம்பி ராமையாவுக்கு உதவுகிறார் வெற்றி. இவர்கள் கொலையாளியை கண்டுபிடித்தார்களா, குற்றவாளி ஏன் தொடர் கொலைகளில் ஈடுபட்டார் என்பதே படத்தின் மீதிக்கதை.
ஹீரோ வெற்றி அசத்தலாக நடித்து படத்தின் வெற்றிக்கும் உதவியிருக்கிறார். த்ரில்லர் ஹீரோ என்ற பட்டத்தை கொடுக்கும் வகையில் அற்புதமாக நடித்திருக்கிறார் என்றே கூறலாம். இதேபோல், கதாநாயகி ஷில்பா மஞ்சுநாத் பத்திரிகையாளராக சிறப்பாக நடித்திருக்கிறார். ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறார் ஷில்பா.
வில்லன் மகேஷ் தாஸ் கிளைமாக்ஸில் கட்டுமஸ்தான சிக்ஸ்பேக் உடற்கட்டுடன் மிரளச் செய்திருக்கிறார். புலன் விசாரணையில் சரத்குமார் கிடைத்ததுபோல் “சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம்” மூலம் கோலிவுட்டுக்கு புதிதாக ஒரு கட்டுமஸ்தான வில்லன் கிடைத்துள்ளார். தம்பி ராமையா, மகேஷ் தாஸ், ரெடின் கிங்ஸ்லி, சுபத்ரா, அனிகா உள்ளிட்டோர் பொருத்தமான வேடங்களில் கச்சிதமாக நடித்துள்ளனர்.
அரவிந்த் கேமராவை கவனிக்க, இசைத்தாளங்களை ஏஜிஆர் கொடுத்திருக்கிறார். இருவரின் கூட்டணி படத்திற்கு உறுதுணையாக அமைந்துள்ளது.
க்ரைம் திரில்லராக வெளிவந்துள்ள இந்த திரைப்படத்தை அனீஸ் அஷ்ரஃப் இயக்கியுள்ளார். குற்றவாளி எப்படி சைக்கோ கொலையாளியாக மாறினார் என்பதற்கு இன்னும் சற்று அழுத்தமான காட்சிகளை வைத்திருக்கலாம். ஜாலியாக தொடங்கும் படம் போகப் போக ஜெட் வேகத்தில் நகர்கிறது.
மொத்தத்தில் “சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம்” விறுவிறுப்பான பக்கங்களைக் கொண்ட புலனாய்வுப் படம். ஆடிக் காற்றை அனுபவித்தபடி தாராளமாக தியேட்டருக்குச் சென்று பெரிய திரையில் கண்டு ரசிக்கலாம்.
– நிருபர் நாராயணன்
