நடிகர்கள் உதயா, அஜ்மல், யோகி பாபு நடிப்பில், பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் “அக்யூஸ்ட்”.
கணக்கு என்னும் குற்றவாளியைக் கொல்ல ஒரு கூலிப்படையும், மறுபுறம் அவரை என்கவுன்ட்டரில் போட்டுத்தள்ள போலீஸ் படையும் முயற்சி செய்கிறது. யார் இந்த கணக்கு, அவன் உயிர் பிழைத்தானா என்பதே படத்தின் ஒன்லைன் ஸ்டோரி.
2000-ம் ஆண்டில் வெளிவந்த, பிரபு கதாநாயகனாக நடித்த திருநெல்வேலி திரைப்படத்தில் அறிமுகமான உதயாவிற்கு, இது கோலிவுட்டில் வெள்ளி விழா ஆண்டாகும். ஆம், கால் நூற்றாண்டு காலத்தை எட்டியுள்ளார். படத்தின் ஹீரோ அவர் தான். தாடி, அழுக்கு உடை, சோக முகம் என உதயா மிக யதார்த்தமாக நடித்துள்ளார். நல்ல திறமை இருந்தும் அவர் முன்னணி ஹீரோவாக ஏன் ஜொலிக்கவில்லை என்பது தான் புரியவில்லை.
மலர் என்னும் அழகான வேடத்தில் வரும் ஹீரோயின் ஜான்விகா கலகேரி, ஜாலியாக நடித்து ரசிகர்களை கொள்ளை கொள்கிறார்.
வேந்தன் என்னும் போலீஸ் கான்ஸ்டபிளாக வரும் அஜ்மல் அலட்டிக்கொள்ளாமல் தேவையான நடிப்பை கொடுத்திருக்கிறார். லாட்ஜ் ஓனர் ராமா நாயுடு கெட்டப்பில் யோகிபாபு கிச்சு கிச்சு மூட்டுகிறார்.
படத்தின் ஒளிப்பதிவாளர் மருதநாயகம் – இசையமைப்பாளர் நரேன் பாலகுமார் கூட்டணி அமைத்து சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்கள்.
நல்ல விறுவிறுப்பாக திரைக்கதையை நகர்த்திச் செல்கிறார் இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ். கிளைமேக்ஸ் காட்சியில் யாரும் எதிர்பார்க்காத திருப்புமுனை சம்பவத்தை கொடுத்து கைதட்டல்களை அள்ளுகிறார் இயக்குநர்.
அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்கள் தவறுகளை மறைக்க அப்பாவிகளை எப்படி பலிகடா ஆக்குகிறார்கள் என்பதை சொல்கிறது இப்படம். மொத்தத்தில் “அக்யூஸ்ட்” அட்டகாசம் செய்துள்ளான்.
– நிருபர் நாராயணன்
