ஸ்டார் சினிமாஸ் தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் வெளியாகியுள்ளது ‘கொம்புசீவி’.
மதுரையில் 1970-களில் வைகை அணை கட்டுவதற்காக சில கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்படுவதால், மக்கள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்படுகின்றனர். பலர் கஞ்சா கடத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
ஊர் தலைவர் சரத்குமார், கதநாயகன் சண்முகப் பாண்டினுடன் இணைந்து கடத்தல் தொழிலில் இறங்க, பல்வேறு சிக்கல்களை சந்திக்கிறார்கள். அவற்றில் இருந்து அவர்கள் மீண்டார்களா இல்லையா என்பது படத்தின் குட்டி ஸ்டோரி.
ரொக்கப்புலியாக சரத்குமார், கொம்புசீவி பாண்டியாக கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முகப் பாண்டியன். சண்டைக் காட்சிகளில் தந்தையைப் போல தூள் கிளப்பியிருக்கிறார் சண்முகப் பாண்டியன். கிராமத்து நாயகனாக அசால்டாக சிக்ஸர் அடித்திருக்கிறார்.
கதாநாயகி தார்ணிகா இன்ஸ்பெக்டர் லைகா கேரக்டரில் அழகாக நடித்துள்ளார். காதல் காட்சிகளில் ரசிகர்களின் மனதை கொள்ளை அடிக்கிறார்.
கம்பீரம், கலகலப்பு கலந்த கேரக்டரில் அசத்தியிருக்கிறார் சரத்குமார். காளி வெங்கட், முனிஷ்காந்த், தருண் கோபி உள்ளிட்டோர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளனர்.
மதுரை வட்டார மொழி படம் முழுக்க மண்ணின் மணம் பரப்புகிறது. படத்திற்கு அது யதார்த்தத்தையும் கொடுத்திருக்கிறது.
நீண்ட நாட்களுக்கு பிறகு இசை அமைத்திருக்கும் யுவன் ஷங்கர் ராஜா, ராஜா வீட்டு கன்னுக்குட்டி என்பதை உணர்த்தும் வகையில் இசை தூரிகையால் இதயங்களை இதமாக வருடிக் கொடுத்திருக்கிறார்.
பாடலாசிரியர்கள் சினேகன், யுகபாரதி, பா.விஜய் பாடல்களை தீட்டியுள்ளனர்.
வைகை அணைக்கு அருகேயுள்ள காடு மலைகளையும் தரிசு நிலங்களையும் அழகாக படம்பிடித்து காட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம்.
முதல் பாதி கலகலப்பாக நகரும் வேகம் தெரியாமல் செல்கிறது. இரண்டாவது பாதியில் இயக்குநர் பொன்ராம் இன்னும் சற்று கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.
சண்முகப் பாண்டியனுக்கு இந்த படம் ஒரு சூப்பர் கம்பேக் படமாக அமைந்துள்ளது.
மொத்தத்தில், ‘கொம்புசீவி’ படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு கம்பீரமான திரைப்படம். தியேட்டரில் ரசித்து மகிழலாம்.
– நிருபர் நாராயணன்
