‘கொம்பு சீவி’ படத்தின் இசை வெளியீட்டு விழா

99 0

சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார், ‘இளைய கேப்டன்’ சண்முக பாண்டியன் விஜயகாந்த் இணைந்து நடிக்கும் ‘கொம்பு சீவி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கொம்பு சீவி’ திரைப்படத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் விஜயகாந்த், தார்னிகா, காளி வெங்கட் ,முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கிராமிய பின்னணியிலான ஆக்ஷன் வித் காமெடி எண்டர்டெயினராக தயாராகி இருக்கும் இப்படத்தை ஸ்டார் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் முகேஷ்.T.செல்லையா தயாரித்திருக்கிறார்.

பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

வரும் 19ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த், எல். கே. சுதீஷ், விஜய பிரபாகரன், இயக்குநர்கள் எஸ். ஏ. சந்திரசேகரன், எம். ராஜேஷ், மித்ரன் ஆர். ஜவகர், நடிகர் ரியோ, நாயகர்கள் சரத்குமார் – சண்முக பாண்டியன் விஜயகாந்த், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம், கலை இயக்குநர் சரவணன் அபிராமன், படத்தொகுப்பாளர் தினேஷ் பொன்ராஜ், நடிகர் கல்கி ராஜா, தயாரிப்பாளர் முகேஷ்.T.செல்லையா, இயக்குநர் பொன்ராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர் பேசுகையில், ”கொம்பு சீவி படத்தின் போஸ்டரை பார்க்கும்போது எனர்ஜியாக இருக்கிறது. கொம்பு சீவி என கிராமப்புறத்தில் காளையை குறிப்பிடுவார்கள். இதில் யார் கொம்பு சீவி என தெரியவில்லை. இரண்டு பேரும் அந்த அளவிற்கு இருக்கிறார்கள். கேப்டன் விஜயகாந்த் கண்களில் ஒரு நெருப்பு இருக்கும், ஒரு வேகம் இருக்கும். அந்த நெருப்பு கலந்த பார்வை சண்முக பாண்டியனிடமும் இருக்கிறது.

‘உனக்கு நான் சளைத்தவன் இல்லடா..!’ என சரத்குமாரும் அதில் ஆக்ரோஷமாக இருக்கிறார்.‌ அவரது கெட்டப் நன்றாக இருக்கிறது. ‘வயதானாலும் நான் கொம்பு சீவின காளை டா..!’ என்பது போல் இருக்கிறது அவருடைய தோற்றம். அந்த வகையில் இந்த போஸ்டரே படத்தின் வீரத்தை காட்டுகிறது.

இயக்குநர் பொன்ராமிடம் இருக்கும் நகைச்சுவை உணர்வு எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் நகைச்சுவையை விட வேகம் – ஆக்ஷன் அதிகம் இருக்கும் என நம்புகிறேன். ஏனெனில் இன்றைய தலைமுறையினர் இதைத்தான் ரசிக்கிறார்கள் என தெரிந்து கொண்டு இப்படி ஒரு படத்தை கொடுத்திருக்கிறார். அவருடைய ஒவ்வொரு படமும் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். ஏனென்றால் பொன்ராம் என்னுடைய பிள்ளைகளில் ஒருவர்.

இயக்குநர் ஒரு இளைஞர், ஹீரோ ஒரு இளைஞர், சரத்குமார் ஒரு இளைஞர், இசையமைத்த யுவன் ஷங்கர் ராஜா ஒரு இளைஞர். இப்படி இளைஞர்கள் புதிய வேகத்துடன் இணைந்திருக்கிறார்கள்.

உலகத்திற்கே உரிய ஒரு சரித்திரம் இருக்கிறது. மாற்றம் என்பது மட்டுமே மாறாதது. அது எல்லாத் துறையிலும் உண்டு. சமூகம்- அரசியல்- திரைத்துறை- என எல்லாத் துறையிலும் இது உண்டு. எனக்குத் தெரிந்து திரையுலகில் ஒரு காலத்தில் எம் கே தியாகராஜ பாகவதர்-பி யு சின்னப்பா, அதற்குப் பிறகு எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினி-கமல் அதற்குப் பிறகு இன்றைய சூப்பர் ஸ்டார்கள் என மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இதை யாராலும் மாற்ற முடியாது. இது காலத்தின் கட்டாயம்.

ஆகவே மாற்றத்திற்குரிய இளைஞர்கள் வெற்றி பெற வேண்டும். ஏனெனில் இந்த இளைஞர்களும், தமிழகத்தில் உள்ள மக்களும் ஒரு மாற்றத்தை விரும்பி கொண்டிருக்கிறார்கள். அந்த மாற்றம் இந்த திரைப்படத்திலும் நிகழ வேண்டும், வாழ்த்தி விடைபெறுகிறேன், நன்றி,” என்றார்.

விஜய பிரபாகரன் பேசுகையில், ”இந்த மேடையில் நிற்பதற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஹீரோவோட அண்ணனாக இல்லாமல் சண்முக பாண்டியனின் ரசிகனாக இங்கு வந்திருக்கிறேன்.

சண்முகத்தை பற்றி சொல்ல வேண்டும் என்றால், 2012ம் ஆண்டில் இருந்து சினிமாவில் நடிக்க தொடங்கினார். சினிமாவில் 13 ஆண்டு காலமாக சண்முகம் பயணிக்கிறார். இந்த 13 ஆண்டு கால பயணம் எங்களுக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்திருக்கிறது.

இந்த 13 ஆண்டில் எத்தனையோ ஹீரோக்கள் எத்தனையோ படங்களை செய்து இருக்கலாம். ஆனால் இது சண்முகம் நடிக்கும் நான்காவது படம் தான். ஏனென்றால், நடுவில் அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லாத போது அவரை உடனிருந்து கவனித்துக் கொண்டது சண்முகம் தான். ‘எனக்கு படங்களில் நடிப்பதை விட அப்பாவுடன் இருந்து அவரை மீட்டு மீண்டும் தமிழக மக்களுக்கு தர வேண்டும்’ என உறுதியாக சொன்னார். அதனால்தான் அப்பா என்னை அரசியலில் ஈடுபடு என சொன்னார்.

நான் இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால், இந்தப் படத்தின் பணிகள் தொடங்கிய தருணத்திலிருந்து இதுவரை எந்த இடத்திலும் சிறு இடைவெளி கூட இல்லாமல் நடைபெற்று நிறைவடைந்து இருக்கிறது. இதற்கு முன் பல படங்கள் பற்றிய அறிவிப்பு வெளியானாலும் அவை முறையாக நடைபெறவில்லை. இருந்தாலும் அவன் எந்த சலனமும் இல்லாமல் நான் உறுதியாக வருவேன் என நம்பிக்கையுடன் இருந்தான். கேப்டனின் மகன் என்னால் முடியும் என தைரியத்துடன் இருந்தான்.

13 ஆண்டுகளில் அவருடைய நண்பர்கள் சினிமாவில் ஜெயித்தாலும் சினிமா மீதான அவனுடைய ஆர்வம் சிறிதும் குறையவில்லை. இந்த தருணத்தில் ஸ்டார் சினிமாஸ் நிறுவனத்திற்கும், தயாரிப்பாளர் முகேஷ் செல்லையாவிற்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சண்முகத்திற்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவிலான அறிமுகமாக இருக்க வேண்டும் என்று அயராது பாடுபட்டு வருகிறார்.

தயாரிப்பாளர் முகேஷ் சார், சண்முகத்தை வைத்து படம் இயக்க வேண்டும் என்று இயக்குநர் பொன்ராம் ஆர்வத்துடன் இருக்கிறார் என்று எங்களிடம் சொன்னதும் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம்.

நான் கல்லூரி படிக்கும்போது சிவகார்த்திகேயன்-பொன்ராம் கூட்டணியில் உருவான படத்தைப் பார்த்து ரசித்திருக்கிறேன். அந்த அளவிற்கு பெரிய இயக்குநரின் இயக்கத்தில் சண்முகம் நடிக்கப் போகிறான் என்றவுடன் சந்தோஷப்பட்டேன். வேறு யார் நடிக்கிறார்கள் என்று பார்த்தபோது பொன்ராம் இந்த படத்தில் சரத் சார் நடிக்கிறார் என்று சொன்னவுடன் எங்களுக்கு இரட்டிப்பு சந்தோஷம் ஏற்பட்டது.

புலன் விசாரணை காலகட்டத்தில் இருந்து கேப்டனும் சரத் சாரும் ஒன்றாகவே பயணித்திருக்கிறார்கள். இருவருக்கும் இடையேயான நட்பு தனித்துவமானது. இன்று அப்பா இல்லாத நிலையில் சண்முகத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்துவதற்காக சரத் சார் கை கொடுத்து ஆதரவு தருவதை பாசிட்டிவாகத்தான் பார்க்கிறேன்.

இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘வஸ்தாரா..’ பாடலில் சண்முகமும், சரத் சாரும் நடனமாடும் போது, யார் பெட்டர் என்று தான் நான் பார்த்துக் கொண்டிருந்தேன். ரெண்டு பேருமே நன்றாக ஆடினார்கள்.

யுவன் ஷங்கர் ராஜாவை நான் முதல் முறையாக ‘அலெக்ஸாண்டர் மூவி பி ஜி எம் – யுவன் ஷங்கர் ராஜா ‘ என்ற டைட்டில் வரும் போது தான் பார்த்தேன். அதற்குப் பிறகு இப்போது தான் அவரை நேரில் சந்திக்கிறேன். சந்தித்து பேச தொடங்கியவுடன் நிறைய விசயங்களை பகிர்ந்து கொண்டோம்.

‘சகாப்தம்’ படத்தின் பணிகளை தொடங்கும் போது கேப்டன் எங்களிடம் என்ன சொன்னார் என்றால், சண்முகத்தின் முதல் படத்தில் இளையராஜாவின் குடும்பத்திலிருந்து தான் இசை இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். ‘சகாப்தம்’ படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்தார். சண்முகத்தின் அடுத்த படமான ‘படைத்தலைவன்’ படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். அவருடைய அடுத்த படமான ‘கொம்பு சீவி’ படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

கேப்டனின் ஆசை சண்முகத்தின் முதல் மூன்று படங்களிலும் நிறைவேறி இருக்கிறது. பவதாரணி கூட ‘சகாப்தம்’ படத்தில் ஒரு பாடலை பாடி இருக்கிறார். இதனாலேயே சண்முகத்திற்கு கேப்டனின் ஆசி பரிபூரணமாக இருக்கிறது என்பது உறுதியாகிறது.

அப்பா சின்ன வயதில் இருந்தே சினிமா என்றால் ஹீரோ, ஹீரோயின் மட்டும் இல்ல அதுல ஒர்க் பண்ற எல்லா டெக்னீஷியன் பெயரையும் நீ படிக்க வேண்டும் என சொல்வார். எல்லோரும் ஒன்றிணைந்து தான் ஒரு படத்தினை உருவாக்குகிறார்கள் என்பார். அதனால் இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தேனியில் நடைபெற்ற போது நானும், அம்மாவும் சென்றிருந்தோம். அப்போது இந்த ‘உசிலம்பட்டி..’ பாடல் ஒலித்த போது அனைவரும் ரசித்தனர். இதை பார்த்த உடன் இந்த பாடல் மிகப்பெரிய ஹிட் ஆகும் என்று நான் நினைத்தேன். படம் வெளியான பிறகு இதற்காகவே நிறைய ரசிகர்கள் திரையரங்கிற்கு வருகை தருவார்கள். இது சண்முகத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் என்று நான் நம்புகிறேன். அத்துடன் இது ஒரு புது கூட்டணி என்பதாகவும் பார்க்கிறேன். டிசம்பர் 19ம் தேதி அன்று கொம்பு சீவி மிகப்பெரிய வெற்றியை பெறும் என நம்புகிறேன்,” என்றார்.

திருமதி பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், ”இங்கு இருக்கும் அனைவரும் கேப்டனை திருமணம் செய்து கொண்ட நாளிலிருந்து எனக்கு தெரிந்தவர்கள் தான், அறிமுகமானவர்கள் தான்.

யுவன் ஷங்கர் ராஜா பிறந்ததில் இருந்தே எனக்கு தெரியும். இளையராஜா சார், ஜீவா ஆன்ட்டி எங்களுடைய இதயத்திற்கு மிகவும் நெருக்கமானவர்கள். திரையுலகத்தில் எனக்கு சிலர்தான் நண்பர்கள். அதில் மிகவும் முக்கியமானவர் ஜீவா ஆன்ட்டி தான். அவர்கள் என்னுடைய இன்ஸ்பிரேஷன் என்றும் சொல்லலாம்.

அப்போதெல்லாம் எல்லா படங்களும் வெளியாகும். ஹீரோக்களை விட நாங்கள் மிகவும் பரபரப்பாக இருப்போம். இசைஞானி இளையராஜா இசையமைத்த எல்லா படத்திற்கும் பிரிவியூ காட்சி பார்க்க ஜீவா என்னை அழைப்பார்கள். கேப்டன் படம் என்றால் நான் என்னுடைய நண்பர்கள், தோழிகள் அனைவரையும் அழைப்பேன்.

பிரபாகரன், சண்முகம் போல் யுவனும் எனக்கு ஒரு பிள்ளை தான். எனக்கு எந்த பிரச்சனை என்றாலும் இளையராஜா குடும்பத்துடன் மனம் விட்டு பேசுவேன். அதேபோல் சரத்குமாருடனும் பேசுவேன்.

எங்களுடைய திருமணம் நடந்தது ஜனவரி 31 1990. அன்றுதான் ‘புலன் விசாரணை’ திரைப்படமும் வெளியானது. அன்று முதல் அவர்கள் இருவரிடத்திலும் உண்டான பிணைப்பு, நட்பு இன்று வரை உறுதியுடன் தொடர்கிறது. நடிகர் சங்க தலைவராக பணியாற்றிய போது சரத் சாரும் நெப்போலியன் சாரும் கேப்டனுக்கு இரண்டு கரங்கள் போல் இணைந்து செயல்பட்டார்கள். இப்படி பழைய நினைவுகளை நினைக்கும் போது ஒவ்வொன்றும் அற்புதமான தருணங்களாகத்தான் இருக்கிறது.

சண்முக பாண்டியன் நடித்த ‘சகாப்தம்’ படத்திற்கு தயாரிப்பாளர் எல் கே சுதீஷ். அவருடைய தாய் மாமாவாக மட்டும் இல்லாமல் அவருடைய அனைத்துமாக இன்று வரை அவர் இருக்கிறார்.‌

இந்தப் படத்தை நான் பார்த்து விட்டேன். இந்தப் படம் குடும்பம் குடும்பமாக திரையரங்கத்திற்குச் சென்று பார்த்து ரசித்து கொண்டாட கூடிய படமாக இருக்கும். இதனை தமிழக மக்கள் அங்கீகரிப்பார்கள்.

இந்தப் படத்தின் சிறப்பம்சம் என்ன என்றால், ராஜா சாரும், யுவனும் இணைந்து ஒரு பாடலை பாடியிருக்கிறார்கள். அம்மா பற்றிய சென்டிமென்ட் பாடல் என்றால் அது ராஜா சார் பாடினால்தான் சிறப்பு.

படத்தில் சண்முகமும் , சண்முகத்தின் தாய் மாமாவாக நடித்திருக்கும் சரத் சாரும் அடிக்கும் லூட்டி அனைவரையும் ரசிக்க வைக்கும். இவர்கள் இருவருக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. இருவரும் கடினமாக உழைத்திருக்கிறார்கள். டிசம்பர் 19ம் தேதியன்று கொம்பு சீவி படம் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து, ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

நடிகர் சண்முக பாண்டியன் பேசுகையில், ”இந்த படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம். திரைத்துறையில் நீண்ட கால அனுபவமிக்க பலர் என்னுடன் நடித்தார்கள். அப்பாவின் நெருங்கிய நண்பரான சரத்குமார் சார் நடித்திருக்கிறார். இந்த படத்தில் பணியாற்றியதிலிருந்து எனக்கும் அவர் நெருங்கிய நண்பராகி விட்டார். அவருடன் பழகிய நாட்கள் அனைத்தும் மறக்க முடியாதவை. குறிப்பாக படப்பிடிப்பு தளத்தில் அவருடைய அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன். பல நடிகர்களுக்கு அவர் உதவி செய்திருக்கிறார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை பார்த்த பிறகு, நானும் இயக்குநர் பொன்ராமின் ரசிகனாகி விட்டேன். அவருடன் இணைந்து ஒரு படம் பணியாற்ற வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. அவருடன் பணியாற்ற முடியுமா என்ற எண்ணம் ஏற்பட்டது. அது இன்று சாத்தியமாகி இருக்கிறது. அதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னிடம் இருக்கும் நகைச்சுவை நடிப்பையும், எதிர்வினையையும் அவர்தான் வெளிக்கொண்டு வந்தார்.

படப்பிடிப்பிற்கு செல்வதற்கு முன் ஒத்திகையும், பயிற்சியும் செய்தோம். படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் எங்களுக்கு நிறைய சுதந்திரத்தை அளித்தார். காட்சிகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்பையும் உருவாக்கி தந்தார். குறிப்பாக நான்- சரத் சார் -கல்கி- மூவரும் லாரி தொடர்பான காட்சி ஒன்றில் நடித்தோம். அந்த காட்சியில் நாங்களாக தான் ஒரு எல்லைக்கு மேல் நிறுத்திக் கொண்டோம்.

இந்தப் படம் சீரியஸான கதை. அதை இயக்குநர் பொன்ராம் நகைச்சுவையுடன் கலந்து சொல்லி இருக்கிறார். இதை நீங்கள் அனைவரும் திரையரங்கத்திற்குச் சென்று ரசித்து அனுபவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

நடிகர் சரத்குமார் பேசுகையில், ”இந்த விழா கொம்பு சீவி படத்தின் இசை வெளியீட்டு விழாவாக மட்டும் எடுத்துக் கொள்ளாமல், இது ஒரு உணர்வுப்பூர்வமான விழாவாக கருதுகிறேன். இந்த விழாவிற்காக இந்த மேடையில் நிற்கும் போது எனது அன்பு நண்பர் விஜயகாந்தை நினைக்காமல் இருக்க இயலாது. அவரைப் பற்றி சிந்திக்கத் தொடங்கினால் என் கண்கள் கண்ணீரால் நிரம்பி விடும். என்னால் கண்ணீர் சிந்தாமல் இருக்க முடியாது.

திருமதி பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில் நட்பை பற்றி குறிப்பிட்டார்கள். இந்தப் படத்தில் நடிப்பதற்கு இயக்குநர் பொன்ராம் ஒரு காரணமாக இருந்தாலும், சண்முக பாண்டியன் நடிக்கிறார் என்றதும் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.‌ ஏனெனில் கலை உலக பயணத்தில் முக்கியமான காலகட்டத்தில் விஜயகாந்தின் ஒப்பனைக் கலைஞர் ராஜு, புலன் விசாரணை படத்திற்காக ஒரு வில்லனை தேடிக் கொண்டிருக்கும் போது சரத்குமார் வாட்ட சாட்டமாக இருக்கிறார் என என்னை விஜயகாந்த்திடம் பரிந்துரை செய்திருக்கிறார்.

உடனடியாக என்னை அழைத்துக் கொண்டு விஜயகாந்தின் அலுவலகத்தில் அவர் முன் நிறுத்துகிறார்கள். அவர் என்னை பார்த்தவுடன் உடனடியாக இயக்குநர் செல்வமணியையும், என்னுடைய நண்பர் ராவுத்தரையும் பார்த்து விடுங்கள் என சொன்னார். என்னை பார்த்ததும் அவர் முடிவு செய்துவிட்டார்.

அப்போது இயக்குநரும், விஜயகாந்த்தும் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள் . உடனடியாக நான் அருகில் உள்ள முடி திருத்தும் நிலையத்திற்கு சென்று என்னுடைய மீசையை மழித்து விட்டு அவர்கள் முன் நின்றேன். அன்று தொடங்கியது தான் இந்த கலைப் பயணம். அது மறக்க முடியாத தருணம்.

அந்தப் படம் நிறைவடைந்து வெளியான பிறகு எந்த கதாநாயகனும் பகிர்ந்து கொள்ளாத ஒரு விஷயத்தை விஜயகாந்த் என்னிடம் சொன்னார். ‘சரத் இந்த படத்தில் உங்களுக்குத் தான் மிகப்பெரிய பெயர்’ என்றார். அதைத் தொடர்ந்து கேப்டன் பிரபாகரன் படத்திலும் நடித்தேன்.

புலன் விசாரணை மற்றும் கேப்டன் பிரபாகரன் ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பு நடைபெறும் போதும் சண்டை காட்சிகளில் எனக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது மற்றவர்கள் மாற்று வழியை சொன்ன போதும், சரத் குணம் அடைந்து வந்த பின் அந்த காட்சியை படமாக்கிக் கொள்ளலாம் என்று விஜயகாந்த் உறுதியாக சொல்லி விட்டார். அவருடைய உறுதி தான் என்னை மிகவும் கவர்ந்தது இன்று வரை அவருடைய என்னை பிணைத்து வைத்திருப்பதும் அவருடைய அந்த குணம் தான். அவருடைய திறமை, அன்பு, பாசம் ஆகிய அனைத்தையும் அவருக்கு அருகே இருந்து அனுபவித்தவன் நான்.

இன்று இந்த மேடையில் இருந்து ஒரு விஷயத்தை உங்களிடம் சொல்கிறேன். சண்முக பாண்டியன் எதிர்காலத்தில் மிகப்பெரிய நட்சத்திர நடிகராவார். அதில் எந்த மாற்றமும் இல்லை. கேப்டன் விஜயகாந்த் எப்படி இருப்பாரோ அதேபோல் இவரும் இருக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் ஒரு நடிகராக எளிமையாக அனைவரிடமும் பழகுகிறார்.

இந்தப் படத்தில் மாமன்- மச்சினனாக நாங்கள் நடிக்கவில்லை. வாழ்ந்திருக்கிறோம் என்று தான் சொல்ல வேண்டும். இந்த குடும்ப ரீதியிலான உறவு தொடர வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.

சண்முக பாண்டியனுக்கு ஒரே ஒரு விஷயத்தை மட்டும் தான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். உங்கள் உயரத்தை பற்றி தவறாக நினைக்காமல் உங்கள் உயரத்திற்கு ஏற்ற பொருத்தமான கதையை தேர்வு செய்து நடிக்க வேண்டும். நீங்கள் ‘தென்னிந்தியாவின் அமிதாப்பச்சன்’. அதனால் கழுத்தை குனிந்து மற்றவர்களிடம் கேட்காமல் நிமிர்ந்து கதையைக் கேட்டு பணியாற்ற வேண்டும்.

இந்த ‘கொம்பு சீவி’ படத்தை அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் திரையரங்கத்திற்கு சென்று இந்த படத்தைப் பார்க்கும்போது ரசிகர்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சியே தனி.

ஒரு திரைப்படம் வெளியாகி 30 நாட்களில் டிஜிட்டல் தளத்தில் வந்துவிடும் அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று காத்திருக்காமல், இந்த படத்தை திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசிக்க வேண்டும். அதே தருணத்தில் டிஜிட்டல் தளங்களுக்கும் ஒரு கோரிக்கையை முன் வைக்கிறேன். நீங்கள் ஒரு திரைப்படத்திற்கு 30 நாட்கள் அவகாசம் கொடுப்பதை, 50 நாளாக உயர்த்தினால் நன்றாக இருக்கும். மக்கள் திரையரங்கத்திற்கு வருகை தந்து படத்தை பார்த்து ரசிப்பார்கள்.

ரசிகர்களை திரையரங்கத்திற்கு வரவழைப்பதில் டிஜிட்டல் தளங்களும் தங்களுடைய பங்களிப்பை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் அப்போதுதான் திரைத்துறை ஆரோக்கியமாக இருக்கும் என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

இந்தத் திரைப்படம் விவசாயத்தை பற்றியும், விவசாயம் சிறப்பாக இல்லாத தருணத்தில் விவசாயிகள் என்ன செய்தார்கள் என்பது குறித்தும் ஒரு சிறிய விஷயத்தை எடுத்துக் கொண்டு இயக்குநர் அதனை நகைச்சுவையுடன் கலந்து சொல்லி இருக்கிறார். இந்த படத்தில் உழைத்த அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பேசுகையில், ” நான் இந்த மேடையில் இருப்பதற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நிறைய பேச வேண்டும். நான் குழந்தை பருவத்தில் இருந்து கேப்டனின் படங்களை பார்த்து வளர்ந்திருக்கிறேன். கேப்டன் எனக்கு மிகவும் இன்ஸ்பயரிங்கான பர்சன்.

கேப்டன் திருமணம் ஆகி முதல் முறையாக தம்பதிகளாய் எங்களது வீட்டிற்கு விருந்திற்காக வருகை தந்தார்கள். அப்போது நான் , என்னுடைய உறவினர்கள் அனைவரும் அப்பாவின் இசையை ஒலிக்க விட்டு நடனமாடிக் கொண்டிருந்தோம்.

இயக்குநர் பொன்ராம் என்னை சந்தித்தபோது, யார் ஹீரோ என கேட்டேன். சண்முக பாண்டியன் என்று சொன்னது ஒரு வினாடி கூட தாமதிக்காமல் இப்படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொண்டேன். கேப்டன் சார், ஏராளமானவர்களுக்கு பில்லராக இருந்திருக்கிறார். என்னுடைய சகோதரரான சண்முக பாண்டியனுக்கு சினிமாவில் நிச்சயமாக ஒரு பெரிய இடம் உண்டு.

சரத் சாரிடமிருந்து தொடங்கி இன்று சண்முக பாண்டியனுக்கும் பணியாற்றுகிறேன். இந்தப் படத்தின் திரைக்கதையை கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன். அதிலும் பொன்ராமின் டிரேட் மார்க் காமெடி காட்சிகள் சூப்பராக இருந்தன. அவருடன் பணியாற்றிய அனுபவம் ஜாலியாக இருந்தது.

கேப்டன் சார் நடித்த ‘தென்னவன்’ படத்திற்கு நான் இசையமைத்தேன். ‘அரவிந்தன்’ படத்திற்கு இசையமைப்பதற்கு முன் அண்ணன் கார்த்திக் ராஜா இசையமைத்த ‘அலெக்சாண்டர்’ படத்திற்கு நான் பின்னணி இசையமைத்தேன். அப்போது தயாரிப்பாளர் சுப்பு பஞ்சு , தான் அந்தப் படத்திற்கு பின்னணி இசையமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அந்த படத்தில் ஒரு பாடலையும், பின்னணி இசையும் அமைத்தேன்.

அந்த வகையில் என்னுடைய திரையுலக பயணம் ‘அலெக்ஸாண்டர்’ படத்திலிருந்து தான் தொடங்கியது. இன்று கேப்டன் மகன் நடிக்கும் படத்திற்கு இசை அமைத்திருப்பது அவரின் ஆசியாகவும், எங்களுடைய குடும்பத்தினருக்கு பணியாற்றுவது போலும் இருக்கிறது,” என்றார்.

தயாரிப்பாளர் முகேஷ் த செல்லையா பேசுகையில், ”எல்லோரும் சினிமாவிற்காக சென்னைக்கு வருவார்கள். என்னை கொம்பு சீவி விட்டது இரண்டு பேர். ஒருவர் இளையராஜா. மற்றொருவர் கேப்டன் விஜயகாந்த். அவர்களுடைய இன்ஸ்பிரேஷன், அவர்களுடைய வாழ்க்கை முறைகள் தான் எனக்கு ஊக்கம் தருபவை.

இளையராஜா இன்றும் காலையில் 6:00 மணிக்கு தன்னுடைய ஒலிப்பதிவு பணியை தொடங்குவார். மாலை 6:00 மணி அளவில் நிறைவு செய்துவிட்டு வீட்டிற்கு சென்று விடுவார். இந்த இடைப்பட்ட தருணத்தில் அவர் வழங்கும் இசை படைப்பு என்பது மகத்தானது அவர் சென்றடையாத இடமே இல்லை.

கேப்டன் விஜயகாந்தின் நடிப்பு மட்டுமல்ல அவருடைய எண்ணங்களும் சிந்தனைகளும் அவருடைய கதாபாத்திரங்களும் மக்களுடைய மனதில் ஆழமாக சென்றடைந்திருக்கிறது. அவர் பிரியாணி மட்டும் போடவில்லை. அதனை பாசத்துடன் வழங்குவார். பிரியாணி உணவு மட்டுமல்ல அவரின் அன்பும் கூட. இதனை பார்த்து வியந்து தான் சென்னைக்கு வருகை தந்தேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்போது தான் பட தயாரிப்பினை தொடங்கி இருக்கிறேன். உங்கள் அனைவரது ஆசியும், ஆதரவும் எங்களுடைய நிறுவனத்திற்கு தேவை. இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

இயக்குநர் பொன் ராம் பேசுகையில், ”மூன்றாண்டுகளுக்கு முன் தயாரிப்பாளர் முகேஷ் செல்லையாவை சந்தித்தேன். அவர்தான் சண்முக பாண்டியனை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்தினார். அதற்காக அவருக்கு என் முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதன் பிறகு கேப்டனையும், சண்முக பாண்டியனையும் சந்தித்தேன். சண்முக பாண்டியனை நேரில் பார்த்ததும் திரைக்கதையில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.

என்னை பொறுத்தவரை ஒரு படத்தை உருவாக்குவதற்கு இயக்குநர் மட்டும் பணியாற்றுவதுடன் தயாரிப்பாளரும் இணைந்து கிரியேட்டிவ்வாக பணியாற்ற வேண்டும் என எதிர்பார்ப்பவன். அந்த வகையில் இந்த படத்திற்கும், இந்த நிகழ்விற்கும் தயாரிப்பாளர் முகேஷின் பங்களிப்பும் அதிகம். இதை நான் பாராட்டுகிறேன்.

இந்தப் படத்தின் கதையைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை படமாக்கி கொண்டிருந்தபோது வைகை அணையின் உள்பகுதிக்கு சென்றேன்.‌ அங்கு மோட்டார் வைத்த கிணறு மூலம் பாசனம் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது அணையின் உள் பகுதிக்குள் யாரேனும் விவசாயம் செய்வார்களா என்ற ஆச்சரியத்துடன் பார்த்தேன். அதைப்பற்றி விசாரித்த போது அணையில் நீர் வற்றி விட்டால் எங்களுடைய நிலம், விவசாயம் இதெல்லாம் தெரியும்.‌ நீரின் அளவு உயர்ந்தால் விவசாயத்தை விட்டு விட்டு சென்று விடுவோம் என்றார்கள். இந்த விஷயம் தான் இந்தப் படத்திற்கான கதையாக உருவானது.

அதன் பிறகு கொரோனா காலகட்டத்தின் போது தேனியில் முகாமிட்டிருந்தேன். அப்போது அணை முழுவதும் நீர் நிரம்பி வழிந்து ஓடிக் கொண்டிருந்தது அப்போது ஒரு பெரியவர் கையில் குடையுடன் பார்த்துக் கொண்டிருந்தார். அந்தப் பார்வை எனக்குள் எதையெதையோ உணர்த்தியது.‌ அதுதான் எனக்கு இந்தப் படத்திற்கான உந்துதல்.

இப்படி ஒரு சீரியஸான கதையில் எப்படி காமெடி என்றுதானே நீங்கள் நினைக்கிறீர்கள். இதுதான் எனக்கான சவால். இதில் தான் ‘ரொக்க புலி’ என சரத் சாரும், ‘பாண்டி’ என சண்முக பாண்டியனையும் கதாபாத்திரங்களாக உருவாக்கியிருக்கிறேன். அந்த வகையில் இந்த படம் ஆக்ஷனும் காமெடியும் கலந்த என்டர்டெய்னராக இருக்கும்.

யுவன் ஷங்கர் ராஜா உடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என எனக்கு நீண்ட நாளாக ஆசை இருந்தது. என்னை முதன் முதலாக துபாய்க்கு அழைத்துச் சென்ற பெருமை அவருக்கு மட்டும் தான் உண்டு. இந்தப் படத்தில் இடம்பெறும் அம்மா பாடலை பாடியதற்காக இசைஞானி இளையராஜாவிற்கு மிகப்பெரிய நன்றி.

சரத் சாரிடம் கதை சொல்லும் போது சற்று பயம் இருந்தது. எப்போதாவது ஒருமுறை தான் அவர் பெரிய மனிதர் போல் நடந்து கொள்வார். மீதமுள்ள அனைத்து நேரங்களிலும் இளைஞராகவும், மனதளவில் குழந்தையாகவும் இருப்பார். அவருடன் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம்.

இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் தார்னிக்காவிற்கும், சரத்குமாருக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. சரத்குமார் நடித்த நாட்டாமை படத்தில் ஆசிரியை வேடத்தில் நடித்த நடிகை ராணியின் மகள்தான் தார்னிகா.

சண்முக பாண்டியன் இந்தப் படத்தில் நடிக்கும் போது காட்சிகளுக்காக ஒத்திகை பார்க்க வேண்டும் என்றதும் முழு ஒத்துழைப்பு வழங்கினார்.‌ ஆனால் சண்டை காட்சிகளுக்காக ஒத்திகை பார்க்காமல் நேரடியாக படப்பிடிப்பில் கலந்து கொண்டார். ஏனென்றால் அது கேப்டனின் ரத்தத்தில் ஊறிய விஷயம். அவருக்கு ஒரு குளோசப் காட்சி வைக்கும் போது கேப்டனை பார்த்தது போலவே இருந்தது. இது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

‘படைத்தலைவன்’ படத்தின் தோற்றத்திலிருந்து தான் அவருடைய இந்த படத்திற்கான கதாபாத்திர தோற்றத்தை உருவாக்கினோம். இந்த திரைப்படத்தின் கதை களம் 1996ம் ஆண்டு என்பதால் அதற்கு ஏற்ற வகையில் மாற்றினோம். பகல், இரவு என்று பாராமல் படப்பிடிப்பில் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார். அவருக்கான உயரமும், இடமும் தமிழ் சினிமாவில் காத்துக்கொண்டிருக்கிறது.

முதலில் திருமதி பிரேமலதா விஜயகாந்த்தின் அழைப்பின் பேரில் மரியாதை நிமித்தமாக தான் அவர்களை சந்தித்தேன். அவர்கள் தான் சண்முகத்திற்காக கதை ஒன்றை உருவாக்குங்கள் என கேட்டுக்கொண்டார். அந்த சந்திப்புக்கு பிறகு தான் இந்த கதைக்கான எண்ணம் உதித்தது. இதற்காக இந்த தருணத்தில் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌

இந்த படத்திற்காக பின்னணி குரல் கொடுத்திருக்கும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதிக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

நடிகர் ரியோ பேசுகையில், ”கொம்பு சீவி படத்திற்கு வரவேற்பு வழங்க உள்ள அனைவருக்கும் நன்றி. சிவகார்த்திகேயனை வைத்து ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, ‘சீமராஜா’ என மூன்று படங்களை இயக்கிய ஒரே இயக்குநர் பொன்ராம். மூன்று திரைப்படங்களையும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் குடும்பம் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பார்த்து ரசிப்பார்கள். தொலைக்காட்சி பார்வையாளர்களின் ரேட்டிங் கணக்குப்படி தமிழில் முதன்மையான இடத்தை பிடித்திருக்கும் திரைப்படம் சீம ராஜா. இதை நான் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் ‘பிராப்பரான டெலிவிஷன் மூவி’ என்றால் இயக்குநர் பொன் ராமிற்கு தான் அதில் முதலிடம்.

நான் அவருடைய இயக்கத்திற்கு மிகப்பெரிய ரசிகன். நிறைய சிரித்து ரசிக்க கூடிய படங்களை உருவாக்கக்கூடிய இயக்குநர் அவர். அவருடைய இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடித்திருக்கும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.

இந்த திரைப்படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போது காமெடியும், ஆக்ஷனும் அதிகம் இருக்கிறது. இது படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பொன் ராமின் இயக்கத்தில் எங்கள் தலைவர் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகி இருக்கும் படம் இது. கிராமிய பின்னணியிலான படங்களுக்கு யுவன் ஷங்கர் ராஜாவின் இசை ஸ்பெஷலாக இருக்கும். உதாரணத்திற்கு ‘பருத்திவீரன்’, சமீபத்தில் வெளியான ‘ விருமன்’ என பல படங்களை குறிப்பிடலாம். இது போன்ற படங்களுக்கு அவருடைய இசை மண்ணின் இயற்கையான மணத்தையும் மண்ணின் ஆழத்தையும் வெளிப்படுத்தும்.

கேப்டனின் மனசு அவருடைய வாரிசுகளுக்கும் இருக்கும் என்பதை விஜய பிரபாகரன் நிரூபித்திருக்கிறார். அண்மையில் அவர் பாலாவின் படத்தை பார்த்து பாராட்டியதே இதற்கு சான்று.‌

சரத்குமார் நடித்த ‘அரவிந்தன்’ படத்தின் மூலமாகத்தான் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளராக அறிமுகமானார். அன்று பார்த்தது போலவே இன்றும் சரத்குமார் இளமையாக இருக்கிறார். அவரை ஓல்டு கெட்டப் போட்டு தான் வயதானவராக காண்பிக்க வேண்டியது இருக்கிறது. யுவனின் இசை எப்படி இளமையாக இருக்கிறதோ, அதேபோல் சரத்குமாரும் இருக்கிறார். அவரும் இந்த படத்தில் இருப்பதால் இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்,” என்றார்.

பாடலாசிரியர் சினேகன் பேசுகையில், ”இந்த மேடை என் மனதிற்கு நெருக்கமான மேடை. நிகழ்வு தொடங்கிய தருணத்திலிருந்து இதுவரை பாசத்தின் குழுமமாகத்தான் இங்கு அனைவரும் வந்திருக்கிறார்கள். இதற்காக வாய்ப்பளித்த இயக்குநர் பொன்ராமிற்கு நன்றி.

இயக்குநர்கள் பொன்ராம் மற்றும் ராஜேஷ் ஆகியோர் எஸ். ஏ சந்திரசேகரின் உதவியாளர்களாக பணியாற்றும் தருணத்திலேயே என்னுடைய நண்பர்கள். ஆனால் நான் அவர்களுடைய எந்த படத்திலும் நான் பாடல் எழுதவில்லை. கொம்பு சீவி படத்தை இயக்கப் போகிறார் என்று கேள்விப்பட்டதும் இயக்குநர் பொன்ராமை சந்தித்து இந்த படத்தில் என்னுடைய பங்களிப்பு இருக்க வேண்டும் என உரிமையுடன் கேட்டேன். ஏனெனில் கேப்டன் மீது வைத்திருக்கும் நட்பின் காரணமாகவே கேட்டேன்.‌

பாடல் எழுதுவதற்கான வாய்ப்பு கிடைத்தவுடன் நான் ‘ராஜ்ஜியம்’ படத்தில் ‘தமிழன் தமிழன்..’ என்பது போன்ற பாடல் எழுதுவதற்கான சூழல் போன்று தான் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் சண்முக பாண்டியன் நடிக்கும் இந்த படத்தில் கமர்ஷியல் பாடலை எழுதுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் கேப்டனுக்கு எழுதியது போல் அசைக்க முடியாத பாடல் ஒன்றை சண்முக பாண்டியனுக்காக விரைவில் எழுதுவேன். இதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

‘பருத்திவீரன்’ படத்தில் எல்லா பாடல்களையும் நான் தான் எழுதினேன். இதுபோன்ற கிராமியத்தை நினைவுபடுத்தும் படத்திற்கு பாடல் எழுத வாய்ப்பளித்த யுவனுக்கும், இயக்குநருக்கும் நன்றி.‌

எங்கள் வீட்டு பிள்ளை சண்முக பாண்டியனுக்கு மிகப்பெரிய அளவில் படத்தை தயாரித்து வெளியிடும் தயாரிப்பாளர் முகேஷ் செல்லையாவிற்கு ஒட்டுமொத்த திரையுலகமும் வாழ்த்து தெரிவிக்க வேண்டும். அவர் கேப்டன் மீது வைத்திருக்கும் அன்பின் காரணமாகவே இது நடைபெற்றது. இதற்காகவும் இந்த படம் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.

கேப்டனுடன் ஆறு, ஏழு படங்களில் பணியாற்றி இருக்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் முதன் முதலாக கேப்டன் நடிப்பில் உருவான ‘வாஞ்சிநாதன்’ படத்திற்கு பாடல் எழுதுவதற்காக தான் சென்னையில் இருந்து மும்பைக்கு விமான பயணம் மேற்கொண்டேன். அது மறக்க முடியாது. அவரைப் பற்றிய நினைவுகள் ஏராளம்.‌ அதைப் பற்றி பேசிக் கொண்டே இருக்கலாம்.

அந்த வகையில் சண்முக பாண்டியன் திரையுலகில் வளர்ந்தால் நாங்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைவோம். கேப்டனுக்கு திருப்பி செலுத்த வேண்டிய அன்பை உங்கள் மீது செலுத்துவோம். அதற்கான களமும், காலமும் வருவதற்காக காத்திருக்கிறோம். நீங்கள் அன்பால் உருவான குழந்தை. அன்பு ஒருபோதும் தோற்பதில்லை. அன்பு வெல்லும். சண்முக பாண்டியன் நடிப்பில் உருவான கொம்பு சீவியும் வெல்லும் என நம்புகிறேன், வாழ்த்துகள்,” என்றார்.

இயக்குநர் எம் ராஜேஷ் பேசுகையில், ”சந்தோஷமாக இருக்கிறது. இந்த விழா ஒரு குடும்ப விழாவை போல் தான் இருக்கிறது. நானும் பொன்ராமும் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய காலத்தில் இருந்தே நண்பர்கள். ‘நண்பேன்டா..’ என சொல்லிக் கொள்வது போல உள்ள நண்பர்கள். அவருடைய வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திலிருந்து இந்த கொம்பு சீவி படம் வரை நான் அவருடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். நண்பனாகவும் கதை விவாதத்தில் பங்கு கொண்டும் உதவி செய்து இருக்கிறேன். இதே போல் அவரும் என்னுடைய படங்களுக்கு உதவி செய்திருக்கிறார். எங்களுக்கு இடையேயான இந்த நட்பு இன்றும் தொடர்கிறது.

இந்தப் படத்தை நான் பார்த்து விட்டேன். மிகவும் பிடித்திருந்தது. திரையில் இரண்டு தூண்களாக சரத்குமார் – சண்முக பாண்டியன் தோன்றுகிறார்கள். இந்தப் படத்தில் சரத்குமார் எனர்ஜியுடன் கூடிய நடிப்பை வழங்கி இருக்கிறார். இந்தப் படத்தில் ஆக்ஷன் காட்சிகளிலும் மிரட்டி இருக்கிறார். நான் படத்தை பார்க்கும் போது நிறைய இடங்களில் சண்முக பாண்டியன் நடிப்பில் கேப்டனை பார்ப்பது போல் இருந்தது. திரையரங்கில் இந்த காட்சிகளை பார்க்கும் போது ரசிகர்களுக்கு குறிப்பாக கேப்டனின் ரசிகர்களுக்கு அற்புதமான தருணமாக இருக்கும்.

திரைக்குப் பின்னால் இரண்டு தூண்களாக ஒளிப்பதிவாளரும், இசையமைப்பாளரும் பணியாற்றியிருக்கிறார்கள். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும். படத்தின் முன்னோட்டத்தை மிகவும் ரசித்தேன்,” என்றார்.

இயக்குநர் மித்ரன் ஆர் ஜவகர் பேசுகையில், ”பொன்ராம் என்னுடைய பேவரைட் ஆன டைரக்டர். அவருடைய காமெடி திரைப்படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தப் படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போது அவருடைய இயக்கத்தில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்களின் பட்டியலில் இருப்பதை போல் இருக்கிறது. இதற்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

சண்முக பாண்டியனை நான் சந்தித்து இருக்கிறேன். அவருடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது என்றால், அவருக்காக மிகப்பெரிய இடம் ஒன்று காத்திருக்கிறது. தைரியத்துடன் கண்ணை மூடிக்கொண்டு அதில் பயணம் செய்யுங்கள். எல்லா திறமைகளும் உங்களிடத்தில் இருக்கிறது. இவற்றையெல்லாம் விட உங்களுடைய அப்பா அம்மாவின் ஆசியும் இருக்கிறது என்பதை மட்டும் உறுதியாக சொல்வேன். திரையில் உங்களை பார்க்கும் போது வியப்பாக இருக்கிறது. இந்த படம் உங்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையாக இருக்கும்.

இந்த விழாவின் நாயகன் யுவன் ஷங்கர் ராஜா. அவருடன் நான் 15 ஆண்டு காலமாக பயணித்து வருகிறேன்.‌ அவருடைய இசையில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தின் பாடல்களும் படமும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,” என்றார்.

Related Post

‘காலங்களில் அவள் வசந்தம்’ – இசை வெளியீட்டு விழா

Posted by - October 17, 2022 0
அறம் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஶ்ரீ ஸ்டூடியோஸ் தயாரிப்பில், ராகவ் மிர்தாத் இயக்கத்தில் கலகலப்பான காதல் கதையாக உருவாகியுள்ள திரைப்படம் ‘காலங்களில் அவள் வசந்தம்’. காதலை ஒரு மாறுபட்ட…

சாலா – சினிமா விமர்சனம்

Posted by - August 28, 2024 0
மணிபால் இயக்கத்தில், தீரன் ஸ்ரீ நட்ராஜ் கதாநாயகனாகவும், ரேஷ்மா வெங்கடேஷ் கதாநாயகியாகவும் நடித்துள்ள படம் சாலா. சென்னை ராயபுரத்தில் மதுபான பார் ஒன்றை ஏலம் எடுப்பது தொடர்பாக…

வருணன் – சினிமா விமர்சனம்

Posted by - March 15, 2025 0
ஜெயவேல் முருகன் இயக்கத்தில் துஷ்யந்த் ஜெயபிரகாஷ், கேப்ரில்லா இணைந்து நடித்துள்ள படம் ‘வருணன்’. ராதா ரவி, சரண்ராஜ், ஷங்கர்நாக் விஜயன், ஹரிபிரியா, ஜீவா ரவி, மகேஷ்வரி மற்றும்…

தூத்துக்குடி கதையில் “லெஜெண்ட்” சரவணன்

Posted by - September 19, 2024 0
லெஜெண்ட் சரவணன் நடிப்பில் தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் புதிய திரைப்படம் உருவாகி வருகிறது. ஆர் எஸ் துரை செந்தில்குமார் இயக்கத்தில்…

‘குமார சம்பவம்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Posted by - September 6, 2025 0
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொலைக்காட்சித் தொடர் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகர் குமரன் தங்கராஜன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘குமார சம்பவம்’ திரைப்படத்தின் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது. இதற்காக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.