இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி – நித்யா மேனன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தலைவன் தலைவி.
மதுரையில் ஹோட்டல் நடத்தி வரும் பத்தாம் வகுப்பில் பெயில் ஆன ஆகாச வீரனுக்கும் (விஜய் சேதுபதி) – எம்.ஏ. படித்த பேரரசிக்கும் (நித்யா மேனன்) காதல் திருமணம் ஆகிறது. மகிழ்ச்சியாக போகும் இவர்களின் வாழ்க்கையில் இருவரது அம்மாக்களும் தலையிட, தம்பதி வாழ்க்கையில் புயல் வீசுகிறது. பிரச்னை பெரிதாகி விவாகரத்து கோரும் அளவுக்கு செல்கிறது.
இறுதியில் அவர்கள் வாழ்க்கைப் பயணம் தொடர்ந்ததா, தம்பதி இணைந்தார்களா என்பது தான் படத்தின் மீதிக்கதை.
குடும்பச் சண்டை, சச்சரவுகள் நிறைந்த படமாக இருந்தாலும் ரசிக்கும்படி உள்ளது. இரு குடும்பத்தாரும் சண்டை போடும் காட்சிகளில் நமக்கு சிரிப்பும் வருகிறது, சலிப்பும் ஏற்படுகிறது. எனினும், எல்லோர் வீட்டிலும் நடக்கும் நிகழ்வு தான் என்பதால், படம் யதார்த்தமாக பயணிக்கிறது.
மதுரை புரோட்டை மாஸ்டராகவே மாறியிருக்கிறார் விஜய் சேதுபதி. அவரும் நித்யா மேனனும் போட்டி போட்டு நடித்துள்ளனர். சண்டையால் வரும் கோபத்தை கொத்து புரோட்டா மீது கதாநாயகன் காட்டும் காட்சி அருமையாக உள்ளது.
ஆகாச வீரனின் அம்மாவாக அற்புதமாக வாழ்ந்திருக்கிறார் தீபா என்றே கூறலாம். யோகி பாபு அவ்வப்போது நமக்கு கிச்சு கிச்சு ஊட்டுகிறார்.
சுகுமாரின் ஒளிப்பதிவும் சந்தோஷ் நாராயணனின் இசையும் படத்திற்கு உறுதுணையாக தாங்கி நிற்கிறது.
சலிப்பு ஏற்படும் இடங்களில் மெல்லிய நகைச்சுவையை புகுத்தி கதையை நகர்த்திச் செல்கிறார் இயக்குநர் பாண்டிராஜ். கதாபாத்திரங்களுக்கு ஆகாச வீரன், பேரரசி, சித்திரை, அரசாங்கம், பொற்செல்வன் என ஒவ்வொரு பெயரையும் பொருத்தமாக வைத்துள்ளார். குடும்பப் பிரச்னைகளை அழகாகவும் நேர்த்தியாகவும் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார் பாண்டிராஜ்.
தலைவனும் தலைவியும் ரசிகர் படையை வென்றுள்ளனர்.
– நிருபர் நாராயணன்
