நடிகர் வெற்றி கதாநாயகனாக நடித்திருக்கும் ‘சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படத்தின் தயாரிப்பாளர் மகேஸ்வரன் தேவதாஸ் மற்றும் இணை தயாரிப்பாளர் சாண்டி ரவிச்சந்திரன் ஆகியோர் இசையை வெளியிட, படக்குழுவினர் பெற்று கொண்டனர்.
கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அனீஸ் அஷ்ரஃப் இயக்கியுள்ளார். வெற்றி, ஷில்பா மஞ்சுநாத், தம்பி ராமையா, மகேஷ் தாஸ், ரெடின் கிங்ஸ்லி, சுபத்ரா, அனிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
சின்னத்தம்பி புரொடக்சன் நிறுவனம் சார்பில் மகேஸ்வரன் தேவதாஸ் தயாரித்திருக்கிறார். சாண்டி ரவிச்சந்திரன் இணை தயாரிப்பாளராக இருக்கும் இந்த திரைப்படத்தை மீடியா மைண்ட்ஸ் நிறுவனம் வழங்குகிறது. அரவிந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஏஜிஆர் இசையமைத்திருக்கிறார்.
உலகம் முழுவதும் ஆகஸ்ட் 1-ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
விழாவில், கதாநாயகன் வெற்றி பேசுகையில், படப்பிடிப்பு தளத்தில் குடும்பமாக இணைந்து பணியாற்றினோம். படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தை அனைவரும் திரையரங்கத்திற்கு குடும்பத்துடன் வருகை தந்து கண்டு ரசித்து பேராதரவு தர வேண்டும் என்றார்.
கதாநாயகி ஷில்பா மஞ்சுநாத் பேசுகையில், தமிழில் அறிமுகமாகும் போது தமிழ் தெரியாது. நடிப்பும் தெரியாது. இருந்தாலும் தமிழ்நாட்டில் தான் திறமைசாலிகளை கண்டறிந்து, வாய்ப்பளித்து அவர்களை பாராட்டுகிறார்கள். தொடர்ந்து ஆதரவும் தருகிறார்கள். ‘காளி’, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’, ‘சிங்க பெண்ணே’ என தொடர்ந்து பல படங்களில் நடித்திருக்கிறேன். இந்தத் திரைப்படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது. உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன் என்றார்.
இயக்குநர் அனீஸ் அஷ்ரஃப் பேசுகையில், சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம் என்பது சென்னையில் நடைபெற்ற ஒரு குற்ற சம்பவத்தின் முதல் பக்கத்தில் இடம் பிடித்திருக்கும் தகவல் என வைத்துக் கொள்ளலாம். க்ரைம் திரில்லர் ஜானரில் சோஷியல் மெசேஜை வைத்து இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம். இது ரசிகர்களை கவரும் என நம்புகிறேன் என்றார்.
