பிளாக் அன்ட் ஒயிட் காலத்து சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதரும், நகைச்சுவை நடிகர் என்.எஸ். கிருஷ்ணனும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட லட்சுமி காந்தன் கொலை வழக்கு, தமிழகம் முழுவதும் அக்காலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அந்த நிஜ சம்பவத்திற்கும் இந்த திரைப்படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. மக்களின் கவனம் பெறும் தலைப்புக்காக அப்படி வைத்திருக்கிறார்கள். அவ்வளவுதான்…
கொலை வழக்கில் கைதான ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொண்டு தனக்கு மரண தண்டனை வழங்குபடி பெண் நீதிபதியிடம் முறையிடுகிறார். ஆனால், அவருக்கு மரண தண்டனை வழங்க நீதிபதிக்கு மனம் வரவில்லை. இங்கு… கதை அப்படியே ஃப்ளாஷ்பேக்காக 50 ஆண்டுகளுக்கு முன்பு பயணிக்கிறது.
கதையின் நாயகன் ஒரு திருட்டு சம்பவத்தின்போது பண்ணையார் லட்சுமிகாந்தனை கொலை செய்துவிட்டு மரண தண்டனைக்காக காத்திருக்கிறான். ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமையில் இருந்து காப்பாற்றவே பண்ணையாரைக் கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறான். காப்பாற்றப்பட்ட அந்த சிறுமிக்கும், தற்போது தீர்ப்பு வழங்கவுள்ள பெண் நீதிபதிக்கும் ஒரு தொடர்பு உள்ளது.
இந்த எளிமையான கதையை மிக யதார்த்தமாகவும், விறுவிறுப்பாகவும் கொடுத்திருக்கிறார்கள்.
நடிகர் வெற்றி, நடிகை பிரிகிடா சாகா, மூத்தப் பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே, வசனகர்த்தா கவிதா பாரதி உள்ளிட்டோர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.
கதாநாயகன், கதாநாயகி மட்டுமின்றி ரங்கராஜ் பாண்டேவும் நடிப்பில் முத்திரை பதித்திருக்கிறார். அவரது உடல்மொழி, வசன உச்சரிப்பு, உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம் என ஒரு தேர்ந்த நடிகராக மாறியிருக்கிறார்.
சரவணன், லிஸ்ஸி ஆண்டனி, அருவி மதன், கன்யா பாரதி, சுப்பிரமணியம் சிவா உள்ளிட்ட அனைவரும் தங்களுக்கான பங்களிப்பை சிறப்பாக வழங்கியுள்ளனர்.
எம்.வி.பன்னீர் செல்வத்தின் ஒளிப்புதிவும், அதற்கு உறுதுணையாக தர்புகா சிவாவின் பின்னணி இசையும் படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது.
லட்சுமி காந்தன் கொலை வழக்கு படம் மூலம் மரண தண்டனைக்கு எதிராக வலுவாக குரல் கொடுத்திருக்கிறார் இயக்குநர் தயாள் பத்மநாபன். ஒவ்வொரு காட்சியையும் மிக நேர்த்தியாகவும் உணர்வுப்பூர்வமாகவும் வடிவமைத்திருக்கிறார்.
வசனங்கள் பல இடங்களில் சிந்திக்க வைப்பதோடு, மனதை உலுக்கும் தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றன. உண்மையில் தூக்குத் தண்டனை என்பது தேவையா? என்ற கேள்வியை நமது தீர்ப்புக்காக முன்வைத்துள்ளனர்.
சமூக அக்கறையுடன் வெளிவந்துள்ள திரைப்படம். தியேட்டரில் பார்த்து ரசிகர்கள் ஆதரவு தரவேண்டிய படம்.
– நிருபர் நாராயணன்
