ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது நூறு சாமி.
கணவனை இழந்த சுவாசிகா, தனது மகன்களான அஜய் திஷன் மற்றும் சக்தி இருவரையும் தனியொரு பெண்ணாக போராடி வளர்க்கிறார்.
ஊரில் இருக்கும் ஆண்கள் தவறான எண்ணத்துடன் செல்வியை நெருங்க முயல்கின்றனர். இந்தச் சூழலில் செல்விக்கு மறுமணம் செய்வது குறித்து ஆசிரியர் ஒருவர் செல்வியின் மூத்த மகன் பாஸ்கரிடம் (அஜய் திஷன்) பேசும்போது, அவனுக்கு வெறுப்பை ஏற்படுத்துகிறது. ஆனால், வளர்ந்த பிறகு பாஸ்கருக்குள் ஏற்படும் மனமுதிர்ச்சி தாய்க்கு மறுமணம் செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. அவரது எண்ணம் நிறைவேறியதா என்பதே ‘நூறு சாமி’ படத்தின் மீதிக் கதை.
கதையின் நாயகியாக நடித்துள்ள சுவாசிகா மிகச்சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். கணவனை இழந்த பெண்கள் அனுபவிக்கும் வலிகளை தனது நடிப்பாலும், வசனங்களாலும் வெளிப்படுத்திய விதம் அருமை. தனக்கு மறுமணம் நடக்கப்போகிறது என்றவுடன் அந்த மகிழ்ச்சி காட்டிய விதமும் சிறப்பு.
விஜய் ஆண்டனியின் நடிப்பு ரசிக்க வைக்கிறது. மகன்களாக நடித்துள்ள அஜய் மற்றும் சக்தி இருவரும் தங்களது கதாபாத்திரத்தில் பட்டையை கிளப்பிவிட்டனர்.
பாலாஜி சக்திவேல், காவ்யா, லிஜோமோல் ஜோஷ், ஜென்சன், கருணாஸ் என அனைவரின் நடிப்பும் யதார்த்தமாக உள்ளது.
ஒளிப்பதிவு, பின்னணி இசை மற்றும் பாடல்கள் அனைத்தும் சூப்பர். வசனங்கள் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் பாயின்ட் என்றே கூறலாம்.
கணவனை இழந்த 43 வயது பெண் ஒருவர், வெறும் தாயாக மட்டுமே இருக்க வேண்டுமா? அவளுக்கென்று தனிப்பட்ட வாழ்க்கை இருக்கக் கூடாதா என்ற கேள்வியை ஆழமாக எழுப்பியுள்ளார் இயக்குநர் சசி.
‘நூறு சாமி’ ரசிகர்கள் கொண்டாட வேண்டிய சாமி…!
– நிருபர் நாராயணன்
