நடிகை கல்யாணி பிரியதர்ஷன் சந்திரா வேடத்தில் வருகிறார். இரவில் மட்டும் பேக்கரி ஒன்றில் வேலை பார்க்கும் இவர் யார், இவரது பின்னணி என்ன என்பதே “லோகா – சேப்டர் ஒன் சந்திரா” படத்தின் ஒன்லைன் ஸ்டோரி.
கதைக்கு ஏற்ப படம் பெரும்பாலும் இரவில் தான் நகர்கிறது. திரைப்படம் முழுவதும் தொழில்நுட்பத்தை நம்பியே எடுக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் மூலம் மலையாள திரைப்படத்தின் லேடி சூப்பர் ஸ்டாராக கல்யாணி முத்திரை பதித்துள்ளார். உடல் உறுப்புகளை திருடும் கும்பலுடன் இவர் மோதுகிறார். பார்வை, உடல்மொழி, நடிப்பு என சகல விதத்திலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார் கல்யாணி.
டான்ஸ் மாஸ்டர் சாண்டி மிகச்சிறந்த நடிகராகவும் உருவெடுத்துள்ளார். இன்ஸ்பெக்டர் நாச்சியப்பனாக வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார். இவர் ஏன் ஹீரோவாக நடிக்கக் கூடாது என்ற கேள்வியும் எழுகிறது.
கிளைமேக்ஸ் சண்டைக் காட்சிகள் அற்புதமாக படமாக்கப்பட்டுள்ளன. ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி சர்வதேச தரத்தில் கேமராவை கையாண்டுள்ளார். ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை படத்திற்கு உறுதுணையாக உள்ளது.
நம் புராணக் கதைகளை சூப்பர் ஹீரோ படமாக எடுத்துள்ளனர். அதற்கு கல்யாணி வஞ்சமில்லாத நடிப்பை வாரி வழங்கியிருக்கிறார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகமாக கண்டு ரசிக்கும் வகையில் உள்ளது.
ரசிகர்களுக்கு ஆவணி கொண்டாட்டம் தான்.
– நிருபர் நாராயணன்
