தமிழ் ஈழத்தில் 1980-களில் உள்நாட்டுப் போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது நிகழ்ந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் திரைப்படம் நீளிரா. இலங்கை ராணுவம், விடுதலைப் புலிகள், அமைதிப்படை ஆகிய முக்கோண தாக்கத்தை வெள்ளித்திரையில் அழகிய அச்சாக வடித்திருக்கிறார்கள்.
ஈழத்தில் ஒரு திருமண வீட்டில் அமைதிப்படை வீரர்கள் நுழைந்துவிட, அவர்களுக்கு எதிராக விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்த, அந்த வீட்டில் காலையில் திருமணம் நடைபெற்றதா, இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை.
தமிழ் ஈழ மக்கள் பட்ட துன்பங்களை, துயரங்களை நூலிழை பிறழாமல் திரைக்காட்சியில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் இயக்குநர் சோமீதரன். அவரது திறமைக்கும் உழைப்புக்கும் பாராட்டுகள்.
அமைதிப்படை வீரராக வரும் கதாநாயகன் நவீன் சந்திரா யதார்த்தமான நடிப்பில் அசத்தியிருக்கிறார். விடுதலைப் புலி போராளியாக சனந்த் நிறைவாக செய்திருக்கிறார். ரூபா உள்ளிட்ட அனைத்து நடிகர், நடிகைகளும் சிறப்பான பங்களிப்பை கொடுத்து படத்தை மெருகேற்றி இருக்கிறார்கள்.
செல்வரத்தினம் பிரதீபனின் கேமரா இலங்கையையும் ஈழத்து வலியையும் அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. கே கைவண்ணத்தில் பாடல்களும் பின்னணி இசையும் உயிரோட்டமாக உள்ளது.
நீளிரா எக்காலத்திற்கும் ஒரு கலைப்படைப்பாக மட்டுமின்றி ஒரு வரலாற்று ஆவணமாகவும் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இது தமிழர்களுக்கான படம்.
– நிருபர் நாராயணன்
