தமிழ்நாட்டின் வட பகுதியில் மண்ணின் மக்களுக்காக போராடிய ஒரு அரசியல் தலைவரின் சுயசரிதையை, வெள்ளித்திரைக்கு ஏற்ப வணிக ரீதியான அம்சங்களுடன் படைத்திருக்கிறார் வ.கௌதமன்.
தமிழின உணர்வாளரான வ. கௌதமன் கதை எழுதி, கதையின் நாயகனாக நடித்து, இயக்கியிருக்கிறார்.
காடுவெட்டி என்னும் கிராமத்தில் பிறந்து ஒரு மாவீரனாக உலா வந்த குருவின் வாழ்க்கைச் சம்பவங்களே படத்தின் வரலாற்றுப் பதிவாக உள்ளது.
காடுவெட்டி குரு கதாபாத்திரத்தில் கெளதமனை விட வேறு யாரும் இவ்வளவு கச்சிதமாக நடித்திருக்க முடியாது என்றே கூறலாம். டூயட் காட்சிகளை மட்டும் தவிர்த்திருக்கலாம். மண்ணை, மக்களை, பாரம்பரியத்தை அழிக்கும் வேலைகளை யார் செய்தாலும் அவர்களை எதிர்த்து போராடும் குருவின் வசனங்கள் கைதட்டல்களை அள்ளுகிறது.
படத்தில் சமுத்திரக்கனி, பூஜிதா பொன்னாடா, இளவரசு, சரண்யா, ஆடுகளம் நரேன், தமிழ் கௌதமன், மன்சூர் அலிகான், ரெடின் கிங்ஸ்லி , நிழல்கள் ரவி, தலைவாசல் விஜய், சாய் தீனா, கௌதமன் மகன் தமிழ் கௌதமன் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தாலும், அனைவரும் கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கிறார்கள்.
காடுவெட்டி குருவின் தந்தை ஜெயராமன் வேடத்தில் சமுத்திரக்கனி யதார்த்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
கோபி ஜெகதீஸ்வரனின் கேமரா விளையாடலும், ஜி.வி.பிரகாஷ்குமார், சாம். சி.எஸ் கூட்டணியின் இசையும் மாவீரனுக்கு புகழ்மாலை சூட்டும் வகையில் அற்புதமாக அமைந்திருக்கிறது.
மக்கள் சமூகத்திற்கு பாடுபட்ட ஒரு போராளியின் கதையாக வெளிவந்துள்ளது படையாண்ட மாவீரா.
ஒரு சமூகப் படம் என்பதை தாண்டி சோழ மன்னர்கள், பிரபாகரன், தமிழ்ப்பற்று என பல பாதைகளில் படம் பயணிப்பதால், இது பல்வேறு தரப்பினரின் இதயங்களை வென்றுள்ளது. அந்தவகையில், படையாண்ட மாவீரா, படத்தின் தலைப்புக்கு ஏற்ப மக்களை ஆண்ட மாவீரன் தான்.
– நிருபர் நாராயணன்
