கோலிவுட்டில் இயக்குநராக வாய்ப்பு தேடும் குமரன் தாத்தா தாய், தங்கையுடன் பூர்வீக வீட்டில் வசித்து வருகிறார். ஆனால், தயாரிப்பாளர் கிடைக்காததால் வீட்டை விற்று அதில் கிடைக்கும் பணத்தில் படம் தயாரித்து இயக்க முடிவு செய்கிறார். அதே வீட்டில் ஒரு அறையில் வசித்து வரும் நெருங்கிய குடும்ப நண்பரும் சமூக ஆர்வலருமான வரதராஜன் மர்மமான முறையில் உயிரிழக்கிறார். இதனால் போலீஸாரின் சந்தேகப் பார்வை குமரன் மீது விழுகிறது.
உண்மையான குற்றவாளி சிக்கினாரா, குமரன் தப்பினாரா, ஆசைப்படி சினிமா டைரக்டர் ஆனாரா என்பதே படத்தின் மீதிக் கதை.
முதல் படத்திலேயே காதல், காமெடி, சண்டைக் காட்சி என வெள்ளித்திரையில் பலமாக முத்திரை பதித்துள்ளார் குமரன். கதாநாயகி பாயல் அழகு பதுமையாக மட்டுமின்றி கச்சிதமான நடிப்பையும் கொடுத்திருக்கிறார்.
பால சரவணன், வினோத் சாகர் நகைச்சுவையில் வெளுத்து வாங்கியிருக்கிறார்கள்.
ஜெகதீஷ் சுந்தரமூர்த்தியின் ஒளிப்பதிவும், அச்சு ராஜாமணியின் இசையும் படத்திற்கு இரட்டை என்ஜின் போல் உதவியிருக்கிறது.
இயக்குநர் பாலாஜி வேணுகோபால் கதையை விறுவிறுப்பாக நகர்த்திச் செல்கிறார். காமெடி கலந்த க்ரைம் திரில்லராக வெளிவந்துள்ளது.
நட்சத்திர நடிகர்கள் இல்லாமலேயே பெரிய சம்பவம் செய்திருக்கிறது ‘குமார சம்பவம்’. தாராளமாக தியேட்டருக்கு சென்று கண்டு ரசிக்கலாம்.
– நிருபர் நாராயணன்
