அறிமுக இயக்குநர் எஸ்.ஜே.என். அலெக்ஸ் பாண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ திரைப்படத்தில் கௌஷிக் ராம், பிரதீபா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, ஜெயக்குமார், அருள் டி. சங்கர், டி எஸ் ஆர், ‘சில்மிஷம்’ சிவா, ஜனனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கெளசிக் தனது நண்பரின் பதிவு திருமணத்திற்கு உதவி செய்யும் நோக்கத்தில் ஆதார் அட்டை உள்ளிட்ட விபரங்களை கொடுக்கிறார். பெண் சார்பாக பிரதீபா விபரங்களை கொடுக்க, தவறுதலாக கெளசிக்-பிரதீபாவுக்கு திருமணம் நடைபெற்றதாக பதிவு சான்றிதழ் கொடுக்கப்படுகிறது.
இந்த சிக்கலில் இருந்து பிரதீபாவை காப்பாற்ற ஹீரோ முயற்சி செய்கிறார். அப்போது பிரதீபா பற்றிய வேறு ஒரு அதிர்ச்சி தகவல் தெரிய வருகிறது. அது அவருக்கு மட்டுமல்ல, ரசிகர்களுக்கும் அதிர்ச்சி அளிக்கிறது.
அது என்ன ?, கெளசிக்கின் காதல் கைகூடியதா? இல்லையா ? என்பதை காட்சிக்கு காட்சி கவிதை போல் திரையில் சொல்லும் புத்தகம் தான் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’.
கும்பகோணம் இளைஞர் வேடத்தில் கச்சிதமாக பொருந்துகிறார் கதாநாயகன் கெளசிக். நேர்த்தியான நடிப்பால் அனைவரையும் கவர்ந்துவிடுகிறார். கிளைமாக்ஸ் காட்சியில் காதலிக்காக கதறும் காட்சியில் கைதட்டல்களை அள்ளுகிறார்.
கதாநாயகி பிரதீபா தோற்றத்தில் மட்டுமல்ல, நடிப்பிலும் அழகாக மிளிர்கிறார். கிறிஸ்டினா என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார்.
படத்தில் வழக்கறிஞராக நடித்திருக்கும் இயக்குநர் அலெக்ஸ் பாண்டியன் நம்மை ரிலாக்ஸ் செய்ய வைக்கிறார். சிங்கம் புலி, கஞ்சா கருப்பு ஆகியோரின் நடிப்பு படத்திற்கு பக்கபலமாக உள்ளது.
பெரிய நட்சத்திரங்கள் இல்லாமல், கதைக்கு ஏற்ற நடிகர்களை தேர்வு செய்திருப்பது மற்றவர்களுக்கும் நல்லதொரு உதாரணம். கிராமத்து காதல் கதையை அழகாக பதிவு செய்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் என்.ஆர்.ரகுநந்தனின் இசையில் பாடல்கள் காதலை கொண்டாட வைத்திருக்கிறது. பின்னணி இசையும் நேர்த்தி. ஒளிப்பதிவாளர் பிரகத் முனியசாமியின் கேமரா கதையோடு இணைந்து பயணித்துள்ளது.
கதையை உணர்வுப்பூர்வமாக திரையில் காட்டியிருக்கிறார் இயக்குநர் அலெக்ஸ் பாண்டியன். மழைக்காலத்தில் இளைஞர்களை காதல் மழையில் நனைய வைத்திருக்கிறார்கள். தியேட்டரில் ரசித்து கொண்டாடலாம்.
– நிருபர் நாராயணன்
