உலகப் புகழ்பெற்ற திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் உட்பட பல்வேறு தொன்மை வாய்ந்த கோயில்கள் குறித்து ஆய்வு செய்து, பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார் திருநாவுக்கரசு. தமிழ்நாட்டின் அனைத்து கோயில்கள் குறித்த தகவல்களை இவர் விரல் நுனியில் வைத்திருக்கிறார்.
மலை மீது அழகுற அமைந்துள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு வரும் பெரும்பாலான பக்தர்களுக்கு அதன் முழு வரலாறும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. சுமார் 650 அடி உயரத்தில் 1,200 படிக்கட்டுகளுடன் மலைமேல் கம்பீரமாய் காட்சியளிக்கிறது இந்த மலைக்கோயில்.
மைசூரை ஆண்ட திப்பு சுல்தானின் படையெடுப்பில் திருச்செங்கோடு கோயிலில் உள்ள விலை மதிக்கமுடியாத பொக்கிஷங்கள் சேதப்படுத்தப்பட்டதுடன் கொள்ளை அடித்தும் செல்லப்பட்டுள்ளன. ஆனால், இந்த நிகழ்வுகள் வரலாற்றில் முறையாக பதிவு செய்யப்படவில்லை.
அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் உள்ள கலைநயமிக்க அழகான சிலைகள் மூக்கு பகுதி உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டு இருப்பதை இன்றும் காணலாம். இதுபோல் மறைக்கப்பட்ட வரலாற்றை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார் திருநாவுக்கரசு. இவரை நடமாடும் என்சைக்ளோபீடியா என்றே அழைக்கலாம். அவ்வளவு தகவல்களை சேகரித்து வைத்திருக்கிறார்.
இவரைப் போன்ற உண்மையான ஆன்மிக சிந்தனை கொண்டவர்களை, தமிழக அரசு கோயில் அறங்காவலர்களாக நியமிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் விருப்பமாக உள்ளது.
– நிருபர் நாராயணன்
