சிவகங்கை மாவட்டம் கட்டிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தி என்ற மாணவி, 5 அரசு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
தந்தை சரவணன் ஆட்டோ ஓட்டுநர், தாயார் மாரியம்மாள் விவசாய தொழிலாளி. இவர்களது மகள் ஆனந்தி எம்.எஸ்.சி பிசிக்ஸ் பட்டதாரி.
மதுரை மீனாட்சி கல்லூரியில் 2021-ல் முதுநிலைப் பட்டப்படிப்பை முடித்த இவர், வெறும் 4 மாதங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராகி அடுத்தடுத்து பணியிடங்களை பெற்று அசத்தியுள்ளார்.
உயர்நீதிமன்றத்தில் கிளர்க், மருத்துவத்துறையில் உதவியாளர், கூட்டுறவுத்துறை இளநிலை ஆய்வாளர் ஆகிய அரசு பணிகளுக்கு முதலில் தேர்வாகியுள்ளார். தொடர்ந்து அடுத்தகட்டத்திற்கு தயாரான இவர் வனத்துறை அதிகாரி தேர்விலும் வெற்றி பெற்று, சிவகங்கை மாவட்ட மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
தற்போது, புதுக்கோட்டை அருகே பொன்னமராவதியில் Gazetted Rank அந்தஸ்தில் வனத்துறை அதிகாரியாக பணியில் சேர்ந்துள்ளார். அதுமட்டுமல்ல, குரூப்-1 முதல்நிலைத் தேர்விலும் வெற்றி பெற்று பிரதானத் தேர்வுக்கு தயாராகி வருகிறார்.
தினமும் அதிகாலை 3 மணிக்கு அலாரம் வைத்து எழுந்து 6 மணி வரை படிப்பு, பின்னர் வீட்டு வேலையில் தாயாருக்கு உதவிகளை செய்துவிட்டு, மாநகராட்சி அலுவலகத்தில் போட்டித் தேர்வுகளுக்கு படிக்கச் சென்றுவிடுவார் ஆனந்தி. அங்கு குரூப் ஸ்டடி முறையில் கற்று, தனது இலக்கை எட்டிப் பிடித்துள்ளார்.
கட்டிக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கிரேசியஸ் மற்றும் வருவாய் ஆய்வாளர் மணிமாறன் ஆகியோரின் வழிகாட்டுதலும் பயிற்சியும் தனக்கு உறுதுணையாக இருந்ததாக நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் ஆனந்தி. இவரது சகோதரர் அருண்குமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.
இன்றைய இளைய தலைமுறை ரீல்ஸ், வாட்ஸ்அப், சோசியல் மீடியா என்று மூழ்கிக் கிடக்கும் சூழலில், 5 அரசு போட்டித் தேர்வுகளில் வெற்றிக் கொடி நாட்டிய ஆனந்தியின் சாதனை நிச்சயம் கொண்டாடப்பட வேண்டியது. கிராமத்தில் எளிய குடும்பத்தில் இருந்து வந்து வெற்றிகளை வசமாக்கி, தமது பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
சிங்கப்பெண் ஆனந்தியின் பணி சிறக்க, நிருபர் டைம்ஸ் மற்றும் நிருபர் டி.வி. சார்பில் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
– நிருபர் நாராயணன்
