எலீட் டாக்கீஸ் சார்பில் கே. பாஸ்கரன் தயாரித்துள்ள பேட்டில் திரைப்படத்தில் அர்ஜூன் பிரபாகரன் அறிமுக நடிகராக களமிறக்கப்பட்டுள்ளார்.
ராப் இசைக் கலைஞராக வரும் அர்ஜூன், பள்ளி ஆசிரியை ஆராத்யாவை காதலிக்கிறார். கதாநாயகியின் பள்ளியில் உள்ள குறைபாடுகளால் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறார். காதலியின் விருப்பப்படி பள்ளி மோசடிகளை ராப் பாடல் மூலம் மக்களுக்கு புரியவைக்க முயற்சிக்கிறார் ஹீரோ. தனது முயற்சியில் அவர் வெற்றி பெற்றாரா, கலையுலக லட்சியத்தை எட்டினாரா என்பதே படத்தின் மீதிக்கதை.
முதல் படம் என்றாலும் தடுமாற்றம் இல்லாமல் திருப்திகரமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் நடிகர் அர்ஜூன் பிரபாகரன். ஹீரோயின் ஆராத்யாவின் அமைதியான நடிப்பு தனி அழகு. காதல் காட்சிகளில் அழகாக ஸ்கோர் செய்திருக்கிறார்.
சரவண சுப்பையா, முனீஷ்காந்த், சுப்ரமணியம் சிவா, காயத்ரி உள்ளிட்டோரும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
ஒளிப்பதிவாளர் யுவராஜ், கதையின் யதார்த்தம் மீறாத காட்சிகளை அழகாக பதிவு செய்திருக்கிறார். ஜீவாவின் பின்னணி இசை அதற்கு ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது.
கல்வி வியாபாரம் என்னும் சமூகத்தின் நீண்ட காலப் பிரச்னையை கிழித்தெடுத்து இருக்கிறார் இயக்குநர் நாராயணன். கட்டணக் கொள்ளை, வசதி குறைபாடுகள், ஆசிரியர்களுக்கும் அரங்கேறும் கொடுமைகள் என பிரபலப் பள்ளிகளின் மறுபக்கத்தை அம்பலப்படுத்தி தனது ஆதங்கத்தை கொட்டியுள்ளார் இயக்குநர்.
மாணவர்கள் மட்டுமல்ல, அவர்களது பெற்றோர்களால் கூட செய்ய முடியாத புராஜெக்ட்களை கொடுத்து மாணவச் செல்வங்களை பாடாய்படுத்தும் புற்றீசல் போல் பரவி இருக்கும் சில பிராண்ட் பள்ளிகளுக்கு இப்படம் ஒரு சவுக்கடி.
மொத்தத்தில், “பேட்டில்” பள்ளி மோசடிகளுக்கு எதிராக வீசப்பட்ட பாட்டில்…!
– நிருபர் நாராயணன்
