கோலிவுட்டில் PRO எனப்படும் மக்கள் தொடர்பு அலுவலர்களில் முதன்மையான இடத்தில் இருப்பவர் நிகில் முருகன்.
நிகில் பிரஸ் மீட் என்றாலே செய்தியாளர் சந்திப்பா அல்லது திருவிழா கூட்டமா என்று பட்டிமன்றம் நடத்தும் வகையில், பிரம்மாண்டமாக நடைபெறும்.
பத்திரிகையாளர்களை ஒருங்கிணைப்பது, செய்தியாளர் சந்திப்பு, உபசரிப்பு, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பிரஸ் ரிலீஸ் தயாரித்தல், நிகழ்ச்சி புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதற்கான ஏற்பாடுகள், நடிகர்-நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்களை ஒருங்கிணைத்து செயல்படுதல் என பல்வேறு கட்டப் பணிகளை உள்ளடக்கியது திரையுலகின் PRO பணி.
இதில், கால் நூற்றாண்டுக்கும் மேலாக அதாவது 30 ஆண்டுகளாக தொழில் நேர்த்தியுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் நிகில் முருகன்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாசன் ஆகிய இருவருக்கும் செய்தித் தொடர்பாளராக நீண்ட காலம் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“பவுடர்” என்னும் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் நடித்துள்ளார் நிகில். ஆரம்பத்தில் பத்திரிகையாளராக பணியாற்றிய இவர், தினமணி நாளிதழின் முதல் ஆசிரியரான டி.எஸ்.சொக்கலிங்கம் அவர்களின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.
திரையுலக சேவையில் 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிகில் முருகன், இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
திரையுலகில் அவரது சேவை பொன்விழா காண, நிருபர் டிவி, நிருபர் டைம்ஸ் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
– நிருபர் நாராயணன்
